தீப திருவிழா பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் உயிரிழப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் வடிவழகன், 38, மாரடைப்பால் உயிரிழந்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவில், பாதுகாப்பு பணியில், 15,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள், திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதில், மங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட, 500க்கும் மேற்பட்ட போலீசார், மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பள்ளியில், நேற்று காலை, 11:30 மணி அளவில், மாணவர்கள் கழிப்பறைக்கு சென்றபோது, ஒரு கழிப்பறையின் கதவு உள்பக்கமாக அடைக்கப்பட்டு திறக்க முடியாமல் இருந்தது. ஆசிரியர்கள் வந்து திறந்து பார்த்தும் முடியவில்லை. தகவலில், போலீசார் பள்ளிக்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, போலீஸ்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில், சென்னை ஆவடியில் சிறப்பு காவல் படையில் பணியாற்றிய, அரியலுாரை சேர்ந்த வடிவழகன், 38, என்பதும், தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு வந்தவர், கழிப்பறைக்கு சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரிந்தது. மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.