ஜி.எஸ்.டி., வரி விகிதம் மாற்றம்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:ஜி.எஸ்.டி., நடைமுறையில் திருத்தங்கள் அறிவித்திருக்கும் மத்திய அரசை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்: ஜி.எஸ்.டி., மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். எட்டு ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மத்திய அரசை பாராட்டுகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்தும்போது, இது தவறு; இதுபோன்ற பல்வேறு வரி விகிதங்களை விதிக்காதீர்கள் என அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம், இது தவறு என அறிவுறுத்தினார்; நிதி அமைச்சர் கேட்கவில்லை. இதுகுறித்து லோக்சபாவில் பலமுறை பேசி உள்ளோம். பல தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் தவறுகளை திருத்த வேண்டும் என கூறினர். இப்போதாவது, அதை உணர்ந்து தவறுகளை திருத்தியதற்காக, நான் நன்றி சொல்கிறேன். எட்டு ஆண்டுகளாக ஏழை, நடுத்தர மக்களை கசக்கி பிழிந்து விட்டனர். 12 சதவீதம், 18 சதவீதம் இருந்த வரியை, 5 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறியுள்ளனர். இத்தனை ஆண்டுகளாக, 18 சதவீதத்தை இதே மக்கள் தானே கட்டினர்? இப்போது அது பொருந்தாது என்றால், கடந்த ஆண்டுகளிலும் பொருந்தாது தானே. மக்களின் பணத்தை எல்லாம் வரியாக வசூல் செய்து, இப்போதாவது மனம் திருந்தி, இந்த வரி விகிதங்களை குறைத்துள்ளனர்; அதற்காக நான் பாராட்டுகிறேன். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜி.எஸ்.டி., கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை, அ.தி.மு.க., சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில், தொலைநோக்கு பார்வையுடன் அரசை வழிநடத்தி வரும் பிரதமர் மோடிக்கும், எளிமைப்படுத்தப்பட்ட, வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி., கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டுகள். புதிதாக செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களின்படி, ஜி.எஸ்.டி., 5, 18 சதவீதம் என, இரண்டு அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண்மை சார்ந்த பொருட்கள் மற்றும் காப்பீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணம் எளிமையையும், நியாயத்தன்மையையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்கிறது. வரி நடைமுறையை எளிமையாக்கி, நுகர்வோர் நம்பிக்கையை இது அதிகரிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இது ஆதரிக்கச் செய்யும். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வாயிலாக, நாடு முழுதும் உள்ள விவசாயிகள், நடுத்தர குடும்பங்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில், பா.ஜ., சோடை போனதில்லை என்பதற்கு மற்றொரு உதாரணம். நடுத்தர மக்களுக்கு வருமான வரி விலக்கு அளித்ததோடு, ஜி.எஸ்.டி.,யிலும் மாற்றங்களை கொண்டு வந்து, மக்களின் சேமிப்பை கணிசமாக ஒரு அரசு உயர்த்துவது என்பது, உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை. அந்த வகையில், இன்றைய சமூகத்தை வலுப்படுத்தி, நாளைய வளமான பொருளாதாரத்திற்கு அடித்தளமிடும் ஜி.எஸ்.டி., சீர்திருத்த நடவடிக்கைகள், இதுவரை எந்த அரசும் வழங்காத மக்களுக்கான தீபாவளி பரிசு தான். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தீபாவளி பரிசு, பிரதமர் மோடியிடம் இருந்து முன்கூட்டியே வந்துள்ளது. இது, நடுத்தர மக்கள், சாமானியர்கள் மற்றும் பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜி.எஸ்.டி., வரி 5, 18 சதவீதம் என, இரு அடுக்குகளாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் ஏழை, பாட்டாளிகளின் மீதான பணச்சுமை குறைகிறது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். தனிநபர் ஆயுள் காப்பீட்டுக்கு வரி விலக்கு: தி.மு.க., வரவேற்பு தனிநபர் ஆயுள் காப்பீட்டுக்கு, ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதற்கு, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். புதுடில்லியில், ஜி.எஸ்.டி., கவுன்சில் 56வது கூட்டம், கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தனிநபர் ஆயுள் காப்பீடு, தனிநபர் மருத்துவ காப்பீடு சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி விலக்கு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக, தற்போதைய மேல் வரியை தொடரலாம். உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் உச்ச வரம்பை அதிகரிக்கலாம். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வரி நடைமுறைகளை நெறிப்படுத்த, அலுவலர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இக்குழுவின் பரிந்துரைகளை நடப்பாண்டு டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்றுமதி மற்றும் 'இன்வெர்ட்டர் டியூட்டி ஸ்ட்ரக்சர்' ஆகியவற்றின் கீழ், தற்காலிகமாக ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறுவதற்கான வழிமுறை வரவேற்கத்தக்கது. வணிகம் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான சிறு இடர் அளவு கொண்ட வணிகங்களுக்கு, எளிதாக்கப்பட்ட பதிவு முறையும் வரவேற்கத்தக்கது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு இழப்பீட்டு மேல்வரி விதிக்கும் காலத்தை, அக்டோபர் முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. எனவே, தமிழகத்தின் பரிந்துரைகளை ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தமிழக நிதித்துறை செயலர் உதயசந்திரன், தகவல் தொழில்நுட்ப துறை செயலர் பிரஜேந்திர நவ்னிட், வணிக வரி ஆணையர் நாகராஜன் பங்கேற்றனர்.