சத்துணவு ஊழியர்களுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர் பணி
சென்னை:ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக, சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து உள்ளது. பள்ளி ஆசிரியர்கள் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்ற, அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதால், ஆசிரியர்களை பாடம் நடத்துவது உள்ளிட்ட பள்ளி பணிகளில் இருந்து விடுவிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. பள்ளி திறந்ததும் ஆசிரியர்களை விடுவித்தால், கற்பித்தல் பணிகள் மட்டுமின்றி, பல்வேறு போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால், ஓட்டுச்சாவடி நிலை அலு வலர் பணியில் இருந்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. இவ்விபரத்தை தமிழக அரசு, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆசிரியர்களை அப்பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணியில், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள், தேசிய வாழ்வாதார திட்ட ஊழியர்கள் ஆகியோரை ஈடுபடுத்த அறிவுறுத்தி உள்ளது.