| ADDED : ஜன 18, 2025 07:24 AM
சென்னை; பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு ஏராளமானோர் திரும்பி வருவதால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜன.14ம் தேதி முதல் தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் விடுமுறையால் குஷியான மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட புறப்பட்டுச் சென்றனர்.இதனால் சென்னையில் வசிப்பவர்கள், படிப்பவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்துவிட்ட படியால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தலைநகர் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர்.ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், ரயில்கள், சொந்த வாகனங்கள் மூலம் சென்னைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மக்கள் நெருக்கம் குறைவாக காணப்பட்ட சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு மாறுகிறது.சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிட்டத்தட்ட 8200 பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந் நிலையில் சென்னைக்கு மக்கள் திரும்பி வருவதால் தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான கார்கள், சொகுசு பஸ்கள் என கடும் நெருக்கடி காணப்பட்டது.கிட்டத்தட்ட 3 கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஜி.எஸ்.டி., சாலை, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை ஈ.சி.ஆர்., சாலையில் வரும் (ஜன) 20ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்தை இலகுவாக்க, ஆம்னி பஸ்கள் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.