சென்னை: தீபாவளிக்கு, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படாததால், மின் நுகர்வு, 22.66 கோடி யூனிட்களாக குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின் நுகர்வு, 12 கோடி யூனிட்கள் சரிவடைந்துள்ளது. தமிழகம் முழுதும் அனைத்து பிரிவுகளிலும், 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. இது, தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது. கடந்த, 2024 ஏப்., 30ல், 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. பல மாவட்டங்களில் இம்மாத துவக்கத்தில் இருந்து சாரல் மழை பெய்கிறது. தீபாவளி விற்பனைக்காக, அனைத்து தொழில் நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட்டு வந்தன. இதனால் தினசரி மின் நுகர்வு, சராசரியாக 35 கோடி யூனிட்களாக இருந்தது. கடந்த 13ம் தேதி 35.66 கோடி யூனிட்; 14ல் 36.10 கோடி ; 15ல் 35.20 கோடி ; 16ல் 35.04 கோடி; 17ல், 34 கோடி யூனிட் களாக இருந்த மின் நுகர்வு, கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து, தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் குறைய துவங்கியது. கடந்த, 18ல், 32.76 கோடி யூனிட், 19ல், 27.62 கோடி யூனிட்களாக குறைந்தது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்று, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படவில்லை. வீடுகளில் மட்டுமே மின் பயன்பாடு இருந்ததால், தீபாவளி அன்று மின் நுகர்வு, 22.66 கோடி யூனிட்களாக குறைந்தது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின் நுகர்வு, 13 கோடி யூனிட்கள் சரிவடைந்துள்ளது.