மருத்துவம் பயில ரஷ்யா செல்லும் மாணவ - மாணவியருக்கு பாராட்டு
சென்னை : மருத்துவக் கல்விக்காக, தமிழகத்தில் இருந்து ரஷ்யா நாட்டின் பல்வேறு கல்லுாரிகளுக்கு டாக்டர் படிப்பு பயிலச் செல்லும் மாணவ - மாணவியருக்கு நேற்று, சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய மொழியை கற்றுக்கொண்ட 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினராக, தமிழக காவல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் கருணாநிதி பங்கேற்றார். அப்போது அவர், மாணவ - மாணவியரிடம் பேசியதாவது: காவல் துறையில், பல்வேறு வழக்குகள் வெற்றி பெறுவதற்கு, மருத்துவர்கள் முக்கிய காரணம். அவர்கள் தரும் ஆதாரங்களின் அடிப் படையில் தான் வழக்குகள் எளிமையாக முடிக்கப் படுகின்றன. எனவே, சமூகத்தில் மருத்துவர்களின் பங்களிப்பு என்பது முதன்மையானதாகும். நம் நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று, கல்வி பயில்வது கடினமாக இருக்கும் என, யாரும் கருத வேண்டாம். கடினமாக இருந்தாலும், அது உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புங்கள். தினம் தோறும் மருத்துவ துறை அபார வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கேற்றார் போல் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், அவற்றை உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக கையாள வேண்டும். சூழ்நிலைக்கேற்ப உங்கள் புத்திசாலிதனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.