தேசிய பாதுகாப்பு சவாலில் இணைய போர், பயங்கரவாதம் தயாராக இருக்க ஜனாதிபதி அறிவுரை
குன்னுார்:''நமது தேச நலன், பாதுகாப்பு மட்டுமில்லாமல், இணையபோர் மற்றும் பயங்கரவாதம் போன்ற புதிய தேசிய பாதுகாப்பு சவால்களுக்கு தயாராக வேண்டும்,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவனில் தங்கியுள்ள ஜனாதிபதி நேற்று சாலை மார்க்கமாக, குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு வந்தார். கல்லுாரி கமாண்டன்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்; மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ்; மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா; எஸ்.பி., நிஷா உட்பட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.அதனை ஏற்று கொண்ட ஜனாதிபதி, ராணுவ மையத்தின் போர் நினைவு சதுக்கத்துக்கு வந்து, மலர் வளையம் வைத்தார். நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு, 'அபைட் வித் மீ' என்ற பாடலை ராணுவ பேண்ட் இசை குழுவினர் இசைக்க, ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கவுரவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.இதை தொடர்ந்து, திரிசக்தி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முப்படை பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது : நாட்டின் முதன்மையான முப்படை கூட்டு பயிற்சி கல்லுாரி அழகிய பசுமையான சூழலில் நீலகிரி மலைகளின் மத்தியில் அமைந்துள்ளது. கடினமான போட்டி தேர்வுகளில் தேர்வான அனைவரையும் வாழ்த்துகிறேன். 26 நாடுகளை சேர்ந்த, 38 சர்வதேச பயிற்சி மாணவ அதிகாரிகளையும் வரவேற்கிறேன். நாட்டிற்கு சேவை செய்யும் உறுதி மற்றும் ஆர்வம் பாராட்டுக்குரியது. இவர்களில் பெண் அதிகாரிகளும் படிப்பில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் மகளிருக்கு ஊக்கம்
அனைத்து துறைகளிலும் முத்திரை பதிக்கும் மகளிர், முப்படைகளிலும் பல்வேறு பிரிவுகளில் கட்டளையிடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.'உலகின் மிக உயரத்தில் உள்ள போர்களமான சியாச்சினில் பணியமர்த்தபட்ட பெண் அதிகாரி; ஐ.என்.எஸ்., போர் கப்பலின் முதல் பெண் தலைமை அதிகாரி மற்றும் ஆற்றல் மிக்க அக்னி வீரர்கள், பெண் மாலுமிகள்,' என, அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கு அதிகரித்து வலிமையுடன் இருப்பது, இளம் மகளிருக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற அத்தியாயங்களில் பெண்கள் போர் வீரர்களாக இடம் பெற்றுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலாட்படை பங்களிப்பு
நம்நாடு மற்றும் நட்பு நாடுகளின் முப்படைகளின் சாத்தியமான தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பயற்சி கல்வி அளிப்பதில் கல்லுாரியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. டிஜிட்டல் மயம், உள் கட்டடமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய காலாட்படையினர், நமது தேசத்தின் எல்லைகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை, பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளனர். அபரிதமான தைரியத்தை வெளிப்படுத்துவதில் அவர்களின் குடும்பங்களின் பங்களிப்பும், தேசிய கடமைக்காக ஆற்றும் பணியும் பெருமிதம் அளிக்கிறது. ஏற்றுமதியில் சாதனை
பல்வேறு வகையிலும் உயர்ந்து வரும் நம் நாட்டின் வளர்ச்சியை உலகம் ஒப்புக்கொள்கிறது. நம் நாடு பெரிய பாதுகாப்பு துறையின் உற்பத்தி மையமாக வளர்ச்சியடைந்து ஏற்றுமதியிலும் சாதிக்கிறது. பாதுகாப்பு துறை அதிவேக தொழில்நுட்பங்களில் சிறந்து முன்னேற்றம் காண்கிறது. எச்.ஏ.எல்., ---டி.ஆர்.டி.ஓ., நிறுவனங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி, 30 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த காலங்களில் 'மேக்கிங் இந்தியா' திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. பாதுகாப்பு சவால்
வேகமாக மாறி வரும் உலகளாவிய அரசியல் சூழ்நிலையால், எந்த சூழலையும் நாம் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகளை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நமது தேச நலன்களை பாதுகாப்பு மட்டுமில்லாமல் இணைய போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற புதிய தேசிய பாதுகாப்பு சவால்களுக்கு தயாராக வேண்டும். காலநிலை மாற்றம் பிரச்னை புதிய பரிமாணங்களை பெறுகிறது. தீவிர ஆராய்ச்சி அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட அறிவு மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும். 'வசுதைவ் குடும்பகம்'
இந்தியா எப்போதும், 'வசுதைவ் குடும்பகம்' என்ற கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் நண்பராகவும், குடும்பமாகவும் கருதுகிறது என்பதை நமது நட்பு நாடு அதிகாரிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் லட்சியத்தை இந்தியா எப்போதும் பின்பற்றுகிறது. இவ்வாறு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
போர் நினைவு துாணுக்கு ஜனாதிபதி புகழாரம்...
குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, கல்லுாரியின் புத்தகத்தில் தனது கையெழுத்துடன், கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், 'வெலிங்டனில் உள்ள போர் நினைவு சின்னத்தில் நமது வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்தினேன். இது நமது துணிச்சலானவர்களின், இறுதியான தியாகத்தின், எச்சமாக உள்ளது. இந்த நினைவு சின்னம் தாய்நாட்டை பாதுகாப்பதில், அவர்களின் வீரம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தேசம் மாவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கும்,' என எழுதியுள்ளார்.