ஈரோடு : ஆடி பண்டிகையின் போது நடக்கும், 'சேவல் கட்டு'க்காக, ஆக்ரோஷமான சண்டை சேவல்கள், ஈரோட்டில் விற்பனைக்கு தயாராகின்றன. இவை, 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போகின்றன. ஈரோடு மாவட்டத்தில், பி.பி. அக்ரஹாரம், பவானி, அந்தியூர், பாரியூர், சித்தோடு, சத்தியமங்கலம், கருங்கல்பாளையம், மூலப்பட்டறை ஆகிய இடங்களில், 'சேவல் கட்டு'க்காக சேவல்கள் வளர்க்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் இத்தொழிலில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபடுகின்றனர்.
செஞ்சேவல், கீரி, வல்லூறு, கருங்காகம், மயிலு, செங்கீரி, காகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ரக சேவல்கள் இப்பகுதியில் வளர்க்கப்பட்டு, கரூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.ஜனவரி மாதம் தை பொங்கல் பண்டிகையின் போதும், ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கின் போதும், தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில், 'சேவல் கட்டு' எனப்படும், சேவல் சண்டை பெருமளவில் நடக்கிறது. சில இடங்களில் சூதாட்டமாகவே இவை நடக்கின்றன. சேவலை வைத்து சூதாடுவதற்கு, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதையும் மீறி, கிராமங்களில் இன்றளவிலும், 'சேவல்கட்டு' நடக்கிறது.
ஆடி மாதம் பிறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 'சேவல்கட்டு'க்காக பயிற்சியளிக்கப்பட்ட சேவல்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. நல்ல ஆக்ரோஷமான சேவல் அதிகபட்சமாக, 35 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நான்கு மாதமேயான சண்டை சேவல், 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.'கீரி' மற்றும் 'மயிலு' ரக சேவல், 15 ஆயிரம் ரூபாய், 'வல்லூறு' வகை சேவல், 10 ஆயிரம் ரூபாய், 'செங்கீரி' ரக சேவல், 20 ஆயிரம் ரூபாய், 'காகம்' ரக சேவல், 30 ஆயிரம் ரூபாய், அதிகபட்சமாக, 'கருங்காகம்' வகை சேவல், 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்ற சேவல் குஞ்சு விலை, 700 ரூபாய். குஞ்சை வாங்கிச் சென்று, வளர்த்து, சண்டைப் பயிற்சி அளிப்பவர்களும் உண்டு. இவ்வகை சேவலுக்கு, கோதுமை, ராகி, சோளம் உள்ளிட்ட தானியங்களை, நாள் ஒன்றுக்கு, 750 கிராம் உணவாக அளிக்கின்றனர். இரண்டு முறை குளிப்பாட்டி, வெயிலில் கட்டுகின்றனர். ஆறு மாதம் வளர்க்கப்பட்ட, கட்டுச் சேவல், ஏழு கிலோ எடை வரை வளர்ந்து, சண்டைக்கு தயாராகி விடுகிறது. ஈரோட்டில் வளர்க்கப்படும் சேவல்கள் போட்டிகளில் கலந்துகொண்டு, மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் சேவல்களை எளிதில் ஜெயிப்பதால், இவை நல்ல விலை போகிறது என, சேவல் வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.