உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8,-997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்புவதில் சிக்கல்

8,-997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்புவதில் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்நாடு சத்துணவு திட்டத்தின் கீழ், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை, தொகுப்பு ஊதியம் அடிப்படையில் நிரப்ப, சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், 1982 முதல், 'தமிழ்நாடு சத்துணவு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த எட்டு ஆண்டுகளாக, இத்திட்டத்தில் பணியாற்ற புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

வலியுறுத்தினர்

அதனால், மொத்தம் உள்ள, 43,131 சத்துணவு மையங்களில், 60,000க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என, சத்துணவு ஊழியர்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஒரே அமைப்பாளர் எட்டுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள மொத்த பணியிடங்களில், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும், மாதம், 3,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் நிரப்ப, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது.இது, சத்துணவு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொகுப்பூதிய அடிப்படையில், பணியிடங்களை நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருவதால், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சத்துணவு ஊழியர்கள் சிலர் கூறியதாவது: காலமுறை ஊதியம் கோரி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், தொகுப்பு ஊதியத்தில், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதாக, அரசு அறிவித்திருப்பது வேதனையாக உள்ளது.

போராட்டம் தொடரும்

கடந்த, 30 ஆண்டுகளாக நாங்கள் போராடி பெற்ற, சிறப்பு காலமுறை ஊதியத்தை, மீண்டும் தொகுப்பு ஊதிய முறைக்கு அரசு கொண்டு செல்வது கண்டனத்துக்கு உரியது. இதை அரசு கைவிட்டு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லையெனில், போராட்டத்தை தொடர்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை