உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாக்கு, சணல், லாரிகளுக்கு மாமூல் பிரச்னைகளால் நெல் கொள்முதலில் சிக்கல்

சாக்கு, சணல், லாரிகளுக்கு மாமூல் பிரச்னைகளால் நெல் கொள்முதலில் சிக்கல்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணி நடக்கிறது. இதற்காக, தஞ்சாவூரில் 287, திருவாரூரில் 382, நாகையில் 89, மயிலாடு துறையில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களிலும் குவியல் குவியலாக பல கி.மீ.,க்கு நெல்லை கொட்டி வைத்து, விவசாயிகள் பல நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகளும் தேக்கமடைந்துள்ளன. டெல்டாவில், அவ்வப்போது பெய்யும் மழையால், பல இடங்களில் நெல் மணிகள் முளைத்து வீணாகி வருகின்றன. இது போல, நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டையும் நனைந்து வீணாகி வருவதாக, பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் உத்தரவு

'இந்த ஆண்டு நெல் உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ள காரணத்தால், விவசாயிகளிடம் இருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், சாக்கு மற்றும் சணல் பற்றாக்குறை, லாரிகள் இயக்கம் குறைவு போன்ற இடர்பாடுகளாலும், கிடங்குகளில் போதிய இடவசதி இல்லாததாலும், நெல் கொள்முதலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் பாண்டியன் கூறியதாவது:

நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில், தலா, 5,000 முதல், 15,000 சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 10,000 மூட்டைகளுக்கு மேல் அறுவடை செய்த நெல், கிராமங்கள் தோறும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கொள்முதலும், அறுவடையும் தடைபட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புயல் சின்னம் உருவாகி வருகிறது. காய்ந்த நிலையில் தரமான நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில், மழையால் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, 22 சதவீத ஈரப்பதம் வரை நிபந்தனையின்றி கொள்முதல் செய்து, அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச்செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறிய தாவது: குறுவையில் அதிகளவில் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடாததே இந்த தொய்வுக்கு காரணம். கடந்த ஆட்சியில் செய்த அதே தவறை இந்த ஆட்சியில் செய்து, லாரி ஒப்பந்தத்தை ஒருவருக்கு மட்டுமே அரசு வழங்கியதால், ஒப்பந்தம் எடுத்தவர் மாவட்ட அளவில் பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்படும் தாமதத்தால் தான், லாரிகளை முறையாக இயக்க முடியவில்லை.

அதிருப்தி

சாக்கு, சணல் பற்றாக்குறை மற்றொரு புறம் பெரிய பிரச்னையாக உள்ளது. இதை சமாளிக்க, தனியார் அரவை ஆலைகளில், பயன்படுத்திய சாக்குகளை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வழங்குகின்றனர். அதில், பல சாக்குகள் சேதமடைந்திருப்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் எடையிழப்பு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளால், விவசாயிகள் மத்தியில் அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமாறன் கூறியதாவது:

கொள்முதலில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை கிடங்குக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அரவை மில்லுக்கு கொண்டு செல்வது வரை வேலை அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், நெல்லை நேரடியாக அரவைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். லாரிகளுக்கான மாமூல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பணியாளர்கள் வேதனை ஒரு ஏக்கருக்கு 80 முதல், 90 மூட்டைகள் வரை விளைந்துள்ளது பெருமையாக உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், சென்னை தலைமை அலுவலக அதிகாரிகளோ, ஏக்கருக்கு 70 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யக்கூடாது, என கூறுகின்றனர். ஆனால், இரண்டு மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள், கிடங்குகளுக்கோ, அரவைக்கோ அனுப்பப்படாததால், ஏற்கனவே எடை குறைந்துள்ளன. தற்போது மழையில் நனைந்து மூட்டைகள் வீணாகி வருகின்றன. பணியாளர்கள் எங்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் ரெக்கவரி கட்ட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த பருவத்தில் வேலை கொடுக்க மாட்டோம். கருப்பு பட்டியலில் சேர்த்து பணிநீக்கம் செய்வோம் என மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Sasikumar Yadhav
அக் 07, 2025 17:40

விவசாய கடன் தள்ளுபடிக்கு ஆசைப்பட்டு திருட்டு திராவிட கும்பலுங்களுக்கு ஓட்டுப்போட்டால் என்ன செய்ய முடியும் . ஒருமுறை பாரதியஜனதா தலைமையிலான கூட்டணியை ஆட்சியில் அமர்த்துங்கள் தரமான ஊழலற்ற ஆட்சியை கொடுப்பார்கள் . இலவசம் ஓஷி ப‌போலியான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துவிட்டு இதுபோன்ற அறுவடை சமயங்களில் புலம்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் . ஊழல்பழி இல்லாத சொல்ல முடியாத அளவுக்கு 25 வருடங்களாக நல்லாட்சி கொடுத்து கொண்டிருக்கிறார் பாரத விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதிக் கொண்டிருக்கிறார் பரந்த பாரதநாட்டின் பிரதமர் மோடிஜி


ஆரூர் ரங்
அக் 07, 2025 11:06

பலர் லஞ்ச ஊழல் பணத்தை வெள்ளையாக்க மற்ற விவசாயிகளிடம் நெல்லை வாங்கி அரசுக்கு விற்கின்றனர்.அதனைத் தடுக்க கட்டுப்பாடு அவசியம்தான். சீசன் நன்றாக இருந்ததால் அமோக விளைச்சல். இதனைக் கருத்தில் கொண்டு அறுவடைக்கு முன்பே நிலத்தின் வீடியோவை விவசாய அதிகாரி அல்லது கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் எடுத்து ஆதாரத்துடன் DPC யில் வாங்கலாம். எல்லோரையும் திருடர்களாகப் பார்க்கக் கூடாது . சம்பா, தாளடி சாகுபடி வேலையை விட்டுவிட்டு குறுவை நெல்லை விற்க காத்திருக்க வைப்பது அநியாயம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 07, 2025 10:53

உண்ணுகின்ற உணவை காப்பாற்ற துப்பில்லை. இலவசமா பஸ் விடுகிறார்கள் தத்திகள். ஓட்டுக்காக தேவையற்ற இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறியாக்குகிறார்கள். எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையையே நாசமாக்குகிறார்கள் இந்த திராவிடிய திருட்டு கூட்டங்கள்.


Sivaram
அக் 07, 2025 10:05

எல்லாம் தெரிந்தேதான் நடக்கிறது எங்களை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது. ஒருவர் அறைகூவல் விட்டு இருக்கிறார் யார் அவர் சொல்லுங்கள் பார்க்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை