உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  10 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட நெடுஞ்சாலைத்துறையில் திட்ட அறிக்கை

 10 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட நெடுஞ்சாலைத்துறையில் திட்ட அறிக்கை

சென்னை: மேல்மருவத்துார், மதுரை பழங்காநத்தம் உள்ளிட்ட, 10 இடங்களில், ரயில்வே மேம்பாலங்கள் கட்ட, திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளை, தமிழக நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது. தமிழகம் முழுதும், 1,000 இடங்களில் ரயில்வே, 'லெவல் கிராசிங்'கள் உள்ளன. இவற்றை கடந்து ரயில்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால், ரயில்வே கேட் திறப்புக்கு பயணியர், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ரயில்வே தண்டவாளங்களை கடந்து, பலர் விபத்துகளை சந்திக்கின்றனர். இதனால், தேவையற்ற உயிரிழப்புகள், உடலுறுப்பு இழப்புகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 10 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட, மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுஉள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டுஉள்ளன. இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை பழங்காநத்தம், நாகர்கோவில் காவல்கிணறு - ராதாபுரம் சாலை, விருதுநகர் - திருத்தங்கல், திண்டுக்கல் - பழனி, திருவண்ணாமலை, திருப்பத்துார் - ஆம்பூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. சென்னை அம்பத்துாரில் உள்ள ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்பட உள்ளது. மறைமலைநகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையேயும், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில், மேல்மருவத்துார் ஆகிய இடங்களிலும், ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு தோராயமாக, 787 கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், ரயில்வே போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ