காட்டு யானைகளுக்கு தனி அடையாள எண் வழங்கி கண்காணிக்க திட்டம்
கோவை:மனித- வன விலங்கு மோதலை தடுக்கும் வகையில், காட்டு யானைகளுக்கு, தனி அடையாள எண் வழங்கி தொடர்ந்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மனித - யானை மோதல் மேலாண்மை குறித்த மாநில அளவிலான பயிற்சி, கோவை வன உயிரின மரப்பெருக்கு நிறுவனம் மற்றும் வனக் கல்லுாரியில் நடந்தது. இதில், தமிழக அரசின் காலநிலை மாற்றத்துக்கான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட தலைமை இயக்குநர் அன்வருதீன் பேசியதாவது:தமிழகத்தில் மனித-வன விலங்கு மோதல் அதிகம் உள்ள 105 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மனித-வன மோதலை களைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான தீர்வை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யானைகள் வனத்தை விட்டு ஏன் வெளியேறுகிறது, அவற்றை எப்படி கையாள வேண்டும், ஒரே யானை குறிப்பிட்ட பகுதிக்கு தொடர்ந்து வருகிறதா, அப்படி வருமேயானால் அந்த யானைக்கான குணாதிசயங்கள் என்ன, அதற்கான காரணம் என்பது குறித்து ஆராய வேண்டும் அதற்கான பயிற்சி தான் இது.அந்த வகையில், வனத்திலிருந்து வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர் சேதம் விளைவிக்கும் யானைகள் எவை என்பது குறித்து அறிவியல் ரீதியாக விபரங்களை தொகுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மாநிலம் முழுக்க வனத்துறையினருக்கு பயிற்சி அளித்து முரண்பாடுடைய யானைகளை போட்டோக்கள் எடுத்து கணக்கெடுத்து, ஆவணப்படுத்தி வருகிறோம். மனித மோதலை ஏற்படுத்தும் யானைகளை கண்டறிந்து, அதற்கு பெயர் வைக்கும் வகையில் அடையாள எண் வழங்கப்படும். முரண்பாடுகள் அதிகமுள்ள இடங்களில் ஜி.பி.எஸ்., அடிப்படையிலான டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்றாண்டுகளில் இத்திட்டம் அமலுக்கு வரும்.வன உயிரின நடமாட்டத்தை உடனுக்குடன் தகவல் பகிர, வனத்துறையின் ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் மேலாண்மை மூலம் மனித -வன உயிரினமோதல்கள் தடுக்கப்படும். மனித--வன உயிரின மோதலை பொருத்தவரை நிரந்தர தீர்வு காண்பது என்பது எளிதல்ல. அதேவேளையில் முரண்பாடுகளின் தீவிரத்தை குறைக்க கவனம் செலுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.