மதுரை: மதுரையில், கிரானைட் முறைகேட்டில் கிடைத்த வருவாயில், பி.ஆர்.பழனிச்சாமி, 13 பஸ்கள் வாங்கியதாக கூறி, அவற்றை போலீசார் நேற்று, பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம், மேலூர் பகுதிகளில், அரசு இடங்களை ஆக்கிரமித்து, கிரானைட் தொழில் செய்ததாகவும், அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு செய்ததாகவும், 'பி.ஆர்.பி., கிரானைட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர், பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். இவர் மீது, இதுவரை, 33 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவர், 15 மாவட்டங்களில், 24 ஆயிரம் ஏக்கர் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, முறைகேட்டில் வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்ய, மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டார்.கிரானைட் முறைகேடு நடந்ததாக கருதப்படும், 2005ம் ஆண்டு முதல், பி.ஆர்.பி., நிறுவனம் வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை, போலீசார் நேற்று துவங்கினர். உத்தங்குடி ரிங் ரோட்டில் உள்ள, பி.ஆர்.பி., பஸ் டெப்போவிற்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றனர்.முறைகேட்டில் கிடைத்த வருவாயில் வாங்கியதாக கூறி, 13 பஸ்களை பறிமுதல் செய்தனர். டெப்போவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பஸ்கள் இயக்கப்பட்ட வழித்தடங்களில், பயணிகள் பாதிக்காமல் இருக்க, கூடுதல் அரசு பஸ்களை இயக்குமாறு, போக்குவரத்துக் கழகத்திற்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.ஐகோர்ட் உத்தரவு : கிரானைட் விதி மீறல் தொடர்பாக, மதுரை, 'சிந்து கிரானைட்' நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட, 'சீல்' அகற்ற, உத்தரவிடக் கோரி, நிறுவன உரிமையாளர், பி.கே.செல்வராஜ் மனு தாக்கல் செய்தார்.தலைமைச் செயலர், தொழில்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம், 29 தேதிக்கு ஒத்திவைத்தார்.புதிய வழக்கு : மதுரை மாவட்டம், உறங்கான்பட்டியில், அரசு இடத்தில், திருட்டுத்தனமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக, 'குமார் கிரானைட்' நிறுவனம் மீது, வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன், கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். குவாரி உரிமையாளர், ராஜாத்தி மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.