உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி60

ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி60

சென்னை: விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் சோதனை முயற்சிக்கான, 'ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி' ஆகிய செயற்கைக்கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட் நேற்றிரவு வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தையும், வரும் 2035ல் விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டங்களுக்கு, பல செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை முயற்சிக்காக தற்போது தலா, 220 கிலோ எடையில், ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி ஆகிய இரு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

நிலைநிறுத்தியது

அவற்றுடன் இஸ்ரோவின், 14 ஆய்வு கருவிகள் மற்றும் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 10 ஆய்வு கருவிகள் ஆகியவற்றை சுமந்தபடி, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட், ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து நேற்றிரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில், ஸ்பேடெக்ஸ் - பி செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, 476.84 கி.மீ., உயரமுள்ள புவி வட்டப்பாதையில் ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதை தொடர்ந்து, 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப் பட்டது. விண்ணில் தனித்தனியே நிலைநிறுத்தப்பட்ட ஸ்பேடெக்ஸ் - பி, ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையில் சற்று இடைவெளி விட்டு, ஒன்றன் பின் ஒன்றை தொடர்ந்து வேகமாக வலம் வந்தபடி இருக்கும். சில நாட்களுக்கு பின், இரண்டின் வேகமும் குறைக்கப்பட்டு, ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்படும். அப்போது, ஒரு செயற்கைக்கோளின் பேட்டரியில் உள்ள மின்சாரம், மற்றொரு செயற்கைக்கோளுக்கு மாற்றம் செய்யப்படும். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இதேபோல் பல செயற்கைக்கோள்கள் தனித்தனியே அனுப்பப்பட்டு, அவை விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்டு, விண்வெளி நிலையம் அமைக்கப்படும்.

24 கருவிகள்

பொதுவாக, ராக்கெட்டின் நான்காம் நிலையானது, செயற்கைக்கோளை திட்டமிட்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்திய பின், அங்கேயே ஆறு மாதங்களுக்கு சுற்றி வருகிறது. எனவே, அந்த ராக்கெட் பகுதி காலியாக சுற்றி வருவதற்கு பதில் ஆய்வு கருவிகளை அனுப்பி, ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று அனுப்பப்பட்ட ராக்கெட்டின் இறுதி பாகத்தில் இஸ்ரோவின், 14 ஆய்வு கருவிகளும், கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின், 10 என, மொத்தம், 24 ஆய்வு கருவிகளும் அனுப்பப்பட்டு உள்ளன. அவை விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படும் என, இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் - பி, ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், 'ஸ்பேஸ் டாக்கிங் எக்ஸ்பிரிமென்ட்' தொழில்நுட்பத்தை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த நாடாக நம் நாடு விளங்கும். பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் இருந்த சக விஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை