பத்திரங்கள் தாக்கலாகவில்லை என குறிப்பு சார் - பதிவாளர்கள் மீது பொது மக்கள் புகார்
சென்னை:சார் - பதிவாளர் நிலையில் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு கூட பத்திரங்களை திருப்பி அனுப்பி விட்டு, பத்திரம் தாக்கலாகவில்லை என தவறாக குறிப்பு எழுதும், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் 585 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக, 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' பதிவுத்துறை இணையதளத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரம்
இதில், பொதுமக்கள், சொத்து விற்பனை குறித்த விபரங்களை உள்ளீடு செய்து, முதல்கட்ட சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன், இதில் தெரிவிக்கப்படும் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை, 'ஆன்லைன்' முறையில் செலுத்தலாம். இதற்கான அடையாள சான்று விபரங்களையும், ஆன்லைன் முறையில் பதி வேற்றம் செய்ய வேண்டும். சில சமயங்களில் இந்த விபரங்கள் பதிவேற்றப்படாத நிலையில், பத்திரப் பதிவுக்கான டோக்கன் வந்து விடும். இதன் அடிப்படையில், பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்தால், சார் - பதிவாளர்களே அதை கணினியில் பதிவேற்றம் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சார் - பதிவாளர்கள், பதிவேற்றம் ஆகவில்லை எனக்கூறி, பத்திரத்தை திருப்பி அனுப்புகின்றனர். அதேநேரம், சம்பந்தப்பட்ட பத்திரம் பதிவுக்கு தாக்கலாகவில்லை என குறிப்பு எழுதி, அதற்கான டோக்கனை முடிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் மீண்டும் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது: பத்திரப்பதிவுக்கான அனைத்து விபரங்களையும், ஆவண எழுத்தர் வாயிலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். எனினும், சில விபரங்கள் பதிவேற்றம் ஆகாமல், விடுபட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில், சார் - பதிவாளர் தன் கணினியில், அதை சரி செய்வதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த சின்ன விஷயத்தை கூட செய்ய, சார் - பதிவாளர்கள் முன்வருவதில்லை. தாக்கலாகவில்லை
அத்துடன், உண்மையான காரணத்தை கூறாமல், பத்திரமே தாக்கலாகவில்லை என்று குறிப்பு எழுதுகின்றனர். எந்த காரணத்தால் பதிவு செய்யவில்லை என்ற உண்மை நிலவரத்தை கூட தெரிவிக்க மறுக்கும், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், பயன்படுத்தாத டோக்கன்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, பத்திரம் தாக்கலாகவில்லை என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது. 'இதில் சம்பந்தப்பட்ட வர்களிடம் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது, அவர்கள் தாக்கல் செய்த பத்திரம் திருப்பி அனுப்பப்பட்டது தெரியவந்தது. தொடர்புடைய சார் - பதிவாளர்களிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.