உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  80 வயது முதியவரை அலைக்கழித்த பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம்

 80 வயது முதியவரை அலைக்கழித்த பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம்

சென்னை: தகவல் கோரிய, 80 வயது முதியவரை அலைக்கழித்து, மன உளைச்சல் ஏற்படுத்திய பொதுத்தகவல் அலுவலரை கண்டித்த மாநில தகவல் ஆணையம், மனுதாரருக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தர விட்டுள்ளது. தஞ்சாவூரில் மருதையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சொர்ணசாரதி. இவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 2024ல் ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல் கேட்டு, தஞ்சை மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்பினார். தகவல் கிடைக்கவில்லை என்பதால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அம்மனு மீதான விசாரணைக்கு பின், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை. முன்னாள் மற்றும் தற்போதைய பொதுத்தகவல் அலுவலர்கள், நகராட்சி உதவி பொறியாளர், செயற்பொறியாளர், நகர திட்டமிடுநர் ஆகியோரிடம், தஞ்சை மாநகராட்சி ஆணையர் கண்ணன் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை, வரும் ஜன., 5ம் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரர், 80 வயதை கடந்த முதியவர். அவருக்கு உரிய காலத்தில் தகவல்களை வழங்காமல், அவரை அலைக்கழித்து உள்ளனர். அவருக்கு தகவல்கள் வழங்கக்கூடாது என்ற தீய நோக்குடன் செயல்பட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தியது மனிதநேயமற்ற செயல். தஞ்சை மாநகராட்சி சார்பில் மனுதாரருக்கு, 25,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மாநகராட்சி அலுவலக கண்காணிப்பாளரும், பொதுத்தகவல் அலுவலருமான யோகாம்பாள், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆணையத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல் படுகிறார். எனவே, அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் ஏன் விதிக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை, ஜன., 5ம் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை