பி.சி., - எம்.பி.சி., விடுதியில் பொது சமையலறை திட்டம்
சென்னை : தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கீழ், 1,338 சமூக நீதி விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதியில் 25,625 கல்லுாரி மாணவர்கள் உட் பட, 77,219 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, உணவு படியாக மாதம் 1,400 ரூபாய்; கல்லுாரி மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில், சென்னையில் ஒருங்கிணைந்த சமையல் அறையில், உணவு சமைக்கப்பட்டு, அனைத்து விடுதிகளுக்கும் வழங்கப் படுகிறது. அதேபோல், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளிலும், ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் உள்ள 13 விடுதிகள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 17 விடுதிகளில் இத்திட்டத்தை செயல் படுத்த அரசு முன்வந்துள்ளது. இதற்காக 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளில், செயல்படுத்தப்படுவதை போல், 7 கிலோ மீட்டருக்கு, ஒரு பொது சமையல் அறை அமைக்கப்பட உள்ளது.