உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடுப்பூசி போட்டவர்களுக்கும் ரேபிஸ் பொது சுகாதார துறை எச்சரிக்கை

தடுப்பூசி போட்டவர்களுக்கும் ரேபிஸ் பொது சுகாதார துறை எச்சரிக்கை

சென்னை:'நாய்க்கடிக்கு உள்ளாகி, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், 'ரேபிஸ்' என்ற வெறிநாய்க்கடி நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. எனவே, தொடர் சிகிச்சை அவசியம்' என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.அதன் இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கேரளாவில், கடந்த மாதம் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன், தடுப்பூசி செலுத்திய பின் உயிரிழந்தார். அதேபோல், மற்றொரு சிறுவனும் உயிரிழந்திருக்கிறார். 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.இதற்கு, தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை, சரிவர பின்பற்றாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.காயங்களை முறையாக, கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக் கூடும்.தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது.ஆழமான காயங்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' எனப்படும், விரைவு எதிர்ப்பாற்றல் மருந்துகளை வழங்காமல் இருப்பதும், ரேபிஸ் வருவதற்கு முக்கிய காரணம்.காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட வேண்டும். அதன்படி, 'வகை 1, வகை 2, வகை 3' என பிரித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.நம் சருமத்தின் மீது, விலங்குகளின் நாக்கு படுவதாலோ, அவற்றை தொடுவதாலோ, உணவளிப்பதாலோ ரேபிஸ் பரவாது. இது 'வகை 1' எனப்படுகிறது.அதேநேரம், கடிக்கும்போது சிராய்ப்பு அல்லது காயங்கள் ஏற்படுவது, இரண்டாவது வகை. இதற்கு 'ரேபிஸ்' தடுப்பூசி அவசியம். ஆழமான காயங்களுக்கு, தடுப்பூசியுடன் சேர்த்து, 'ஆர்.ஐ.ஜி.,' எனப்படும், 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' தடுப்பு மருந்தையும் செலுத்த வேண்டும். முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும் 21வது நாள் என, நான்கு தவணைகளாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்.இம்யூனோ குளோபுலின் மருந்தானது, முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்த வேண்டும். காலதாமதமாகவோ அல்லது அதை மட்டும் தனியாகவோ செலுத்தினால் பலனளிக்காது. ரேபிஸ் உயிரிழப்பையும் தவிர்க்க முடியாது.எனவே, காயங்களை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும், தடுப்பூசிகளை அதன் உற்பத்தியாளர்கள் கூறும் வழிகாட்டுதலின்படி சேமிப்பதும், மிகவும் முக்கியம். இது தொடர்பாக, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும், உயர் அதிகாரிகள் பயிற்சி வழங்குவது கட்டாயம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !