ரூ.120 கோடி வங்கி கடன் மோசடி தொழில் அதிபர் வீடுகளில் ரெய்டு
சென்னை: வங்கிக்கடன் மோசடி தொடர்பாக, சென்னையில் உள்ள, 'லீ ராயல் மெரீடியன் ஹோட்டல்' அதிபர் பெரியசாமியின் வீடு, அலுவலகம் மற்றும் தென்காசி, திருச்சியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் அலுவலகங்கள் உட்பட ஆறு இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களை நடத்தி வரும், பி.ஜி.பி., குழுமத்தின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி. இவரது வீடு மற்றும் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை துாதரகம் அருகே உள்ளது. பெரியசாமியும், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிலரும், சென்னை கிண்டியில், 240 அறைகள் உடைய, 'லீ ராயல் மெரீடியன்' என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை, 7:00 மணி முதல் சோதனை நடத்தினர். அதேபோல, காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட் என்ற சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு சொந்தமான, திருச்சி மற்றும் தென்காசியில் உள்ள இடங்களிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை செய்தனர். பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட் சர்க்கரை ஆலை நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 120.84 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அதற்கு அடமானமாக வைத்த இயந்திரங்கள் மற்றும் சொத்துக் களை திருட்டுத்தனமாக விற்று மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி, சி.பி.ஐ., அதி காரிகள் விசாரணையை துவக்கினர். விசாரணையில், பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட், சம்பந்தமே இல்லாத நிறுவனங்களுக்கு, வங்கியில் கடனாக வாங்கிய பணத்தை அனுப்பி உள்ளது. பெயரளவில் செயல்படும், 'ஷெல்' கம்பெனிகளுக்கும், பழனி ஜி பெரியசாமி தொடர்புடைய, அப்பு ஹோட்டல் குழுமம் மற்றும் ஒட்டியம் வுட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகவே சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர். சி.பி.ஐ., நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை உட்பட ஆறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், குற்றவியல் சதி, நம்பிக்கை மோசடி, சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல், போலி ஆவணங்கள் தயாரித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 120.84 கோடி ரூபாய் கடன் வாங்கி இழப்பு ஏற்படுத்தியதற்கான டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் நிறுவனங்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கியது போல ஆவணங்கள் தயாரித்தல், சகோதர நிறுவனங்கள், சம்பந்தமே இல்லாத நிறுவனங்களுக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களும், சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.