சேலத்திலிருந்து தப்பி வந்த குற்றவாளிகள் விரட்டி பிடித்த ரயில்வே பாதுகாப்பு படை
சென்னை; சேலத்தில் இருந்து தப்பி வந்த இரண்டு குற்றவாளிகளை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் விரட்டி பிடித்தனர். சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் பகுதியில், கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் பார்த்திபன். அதே கடையில் பணிபுரிந்த, பீஹார் மாநிலம் மதுபனி மாவட்டம் ஜெய்நகரைச் சேர்ந்த சமீர்குமார் 35, நேற்று முன்தினம் பார்த்திபனை தாக்கி 25,000 ரூபாயை பறித்துள்ளார். அதன்பின், அதே கடையின் மற்றொரு கிளையில் பணிபுரிந்த, தன் தம்பி முகேஷை அழைத்துக் கொண்டு, சேலம் ரயில் நிலையம் சென்றார். அங்கு வந்த போடி நாயக்கனுார் ரயிலில் ஏறி சென்னை வந்தார். சமீர்குமார் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த பார்த்திபன் அளித்த புகாரில், சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சமீர்குமார் மற்றும் முகேஷை தேடினர். அப்போது, அவர்கள் ரயிலில் சென்னை சென்ற தகவல் கிடைத்தது. உடன், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சென்னை சென்ட்ரலில் நேற்று காலை 8:20 மணிக்கு, போடிநாயக்கனுார் ரயில் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலை சோதனையிட சென்றனர். அவர்களை பார்த்ததும், சமீர்குமாரும், முகேஷும் ரயிலில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களை இன்ஸ்பெக்டர் பிரவீனா, தலைமை காவலர் லலித்குமார் ஆகியோர், பயணியருக்கு மத்தியில் விரட்டி சென்று பிடித்தனர். அப்போது, லலித்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. பிடிபட்ட இருவரையும், தமிழக ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பார்த்திபனை தாக்கி, பணத்துடன் தப்பி வந்ததை, சமீர்குமார், முகேஷ் ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 39,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரும், சேலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந் து வருகிறது.