ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியிடம் விசாரணை
சென்னை: ‘கிரானைட்’ வீரமணி மீதான வழக்கில் தேடப்பட்டு வரும், தொழில் அதிபர் பிரகாஷ் குறித்து, அவரது தந்தையான ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையா, 70, என்பவரிடம், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணி மீதான போக்சோ வழக்கில், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரகாஷ் என்பவரை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரகாஷ் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றது குறித்து, அவரது தந்தையும், ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியுமான கண்ணையாவிடம், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணையில், ‘மகன் பிரகாஷ் குடும்பத்தினர் தனியாக வசிக்கின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் பிரகாஷ், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவார். அவருக்கும், கிரானைட் வீரமணிக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது’ என, போலீசாரிடம் கண்ணையா கூறி உள்ளார்.