உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் 30ம் தேதி வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் 30ம் தேதி வரை மழை

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 30ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை:தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 4 செ.மீ., மழை; கோவை மாவட்டம் சின்னக்கல்லார் சோலையாரில் தலா 3 செ.மீ., மழை; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் தலா 2 செ.மீ., மழை பெய்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், இன்று ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யும். நாளை முதல் 30ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிசொல்லும் வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கையில், 'ஒருசில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்' என்று தெரிவிக்கப்படுகிறது. குறி சொல்பவர் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பொதுவாக கூறுவது போல, வானிலை ஆய்வு மையம் எந்த இடம் என்று குறிப்பிடாமல், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என, பொதுவாகவே, வானிலை அறிக்கை வெளியிடுகிறது.இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: மிதமான மழை பெய்யும் போது, எங்கு மழை பெய்யும் என்ற இடங்களை வானிலை அறிக்கையில் தெரிவிக்க முடியாது. அதாவது, 24 மணிநேர அறிக்கையில் குறிப்பிடும் போது, எந்தெந்த மாவட்டங்கள் என்பதை தெளிவாக குறிப்பிட முடியாது. ஆனால், ரேடார் தகவல் அடிப்படையில், சில மணி நேரங்களுக்கு முன் அளிக்கப்படும் முன்னெச்சரிக்கை அறிக்கையில், மாவட்டங்கள், தாலுகா அளவுக்கு துல்லியமாக கணித்து கூற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !