சாரணர் வைர விழா போட்டி ராஜஸ்தான் அணி முதலிடம்
திருச்சி : மணப்பாறையில், ஏழு நாட்கள் நடந்த பாரத சாரணர் வைர விழா, நேற்று நிறைவு பெற்றது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிப்காட் வளாகத்தில், டிசம்பர், 28ல் பாரத சாரணியர் வைர விழா மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு விழாவை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். இதில், 20,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏழு நாட்களாக நடந்த விழாவில், சாரண - சாரணியர்களுக்கு பல போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில், அதிக புள்ளிகள் பெற்று, ராஜஸ்தான் சாரணர் அணி முதலிடம் பிடித்தது.மேலும், அடுத்த பெருந்திரள் விழாவான, 'ஜம்பூரி' நடக்கும் சத்தீஸ்கர் மாநில சாரண அதிகாரிகளிடம் அமைச்சர் மகேஷ் நேற்று ஜோதியை வழங்கினார். ஜம்பூரி தொடர்பான நினைவு சிறப்பு தபால் தலையையும் அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.வைர விழா நிறைவு நிகழ்ச்சியில், பாரத சாரணர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் கந்தேவால் பேசுகையில், ''சாரணர் இயக்கத்துக்கு சிறந்த சேவை புரிந்ததற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், சாரணர் இயக்கத்தலைவருமான மகேஷுக்கு, சாரணர் இயக்கத்தின் உயரிய விருதான, 'சில்வர் எலிபண்ட்' விருது, விரைவில் ஜனாதிபதியால் வழங்கப்படவுள்ளது,'' என்றார்.