உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸ் - அன்புமணி மோதல் பா.ஜ., அறிவுறுத்தலால் திடீர் சமாதானம்

ராமதாஸ் - அன்புமணி மோதல் பா.ஜ., அறிவுறுத்தலால் திடீர் சமாதானம்

சென்னை: பா.ம.க.,வில் ராமதாஸ் - அன்புமணி இடையே, பொது வெளியில் ஏற்பட்ட மோதல், பா.ஜ., தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ம.க., பொதுக்குழு கூட்டம், நேற்று முன்தினம் புதுச்சேரியில் நடந்தது. இதில், கட்சியின் புதிய மாநில இளைஞர் அணித் தலைவராக, தன் மகள் வழி பேரன் முகுந்தன் என்பவரை நியமிப்பதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.இதற்கு, மேடையிலேயே அக்கட்சி தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே, இவ்வளவு பெரிய பதவியை வழங்கக்கூடாது என்றார். இதனால், கோபமான ராமதாஸ், 'பா.ம.க.,வை நான்தான் உருவாக்கினேன். என் முடிவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம்' என்றார்.அதைத் தொடர்ந்து பேசிய அன்புமணி, 'பனையூரில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. நிர்வாகிகள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என, அறிவித்தார்.ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையிலான மோதல், பா.ஜ., கூட்டணியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும்படி, பா.ஜ., தரப்பில் பா.ம.க., நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், குடும்ப அரசியலையும் ஒழிப்பதே நோக்கம் என, பா.ஜ., தரப்பில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில், குடும்பத்தில் உள்ள குழப்பத்தை, கட்சியில் கொண்டு வந்து, கூட்டணியில் ராமதாஸ், அன்புமணி சலசலப்பை ஏற்படுத்திவிட்டனர். இதை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ரசிக்கவில்லை. தந்தை, மகன் பிரச்னை, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால், பா.ம.க., நிர்வாகிகளிடம், தந்தை, மகன் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும்படி கூறியுள்ளனர். பா.ஜ., அறிவுறுத்தலை தொடர்ந்து, நேற்று இருவருக்கும் இடையே சமரச பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் தந்தை, மகன் இடையிலான பிரச்னை முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை