உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக வலைதள கணக்குகளை மீட்க டி.ஜி.பி.,யிடம் ராமதாஸ் புகார்

சமூக வலைதள கணக்குகளை மீட்க டி.ஜி.பி.,யிடம் ராமதாஸ் புகார்

சென்னை : 'என் பேஸ்புக், எக்ஸ் தள கணக்குகளை, அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து, அன்புமணியை நீக்கி, ஏப்., 10ம் தேதி செயல் தலைவராக நியமித்து, ராமதாஸ் அறிவித்தார். அதன்பின், இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், சமாதான முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இதனால், மே 28க்கு பின், ராமதாசின், 'பேஸ்புக், எக்ஸ்' தளங்களில் எவ்வித பதிவும் இடம்பெறவில்லை.அவரது சமூக வலைதளங்களை நிர்வகித்து வந்த பொறுப்பாளர்கள் அன்புமணி பக்கம் இருப்பதால், ராமதாசால், சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட முடியவில்லை.இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் பேஸ்புக் கணக்குகளை, அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாகவும், அவற்றை மீட்டு தரக் கோரியும், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம், ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.புகாரில் கூறியிருப்பதாவது:சமூக வலைதள கணக்குகளின், 'பாஸ்வேர்டு' மாற்றப்பட்டு இருப்பதுடன், அவற்றை இயக்குவதற்கான உரிமையும் மற்றொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை.ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பும் மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்த முடியவில்லை. இவற்றை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !