87 வயதிலும் நீச்சல் குளத்தில் நீந்தி ராமதாஸ் உற்சாகம்
திண்டிவனம் : தைலாபுரம் தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பா.ம.க., நிறுவனர் உற்சாகத்துடன் நீச்சல் அடித்து மகிழ்ந்த காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மனக்கசப்பு உள்ள நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், கடந்த 16ம் தேதி பா.ம.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தைகூட்டினார்.அடுத்த நாள் 17ம் தேதி மகளிர் அணி, இளைஞரணி அணி கூட்டத்தையும், கடந்த 19ம் தேதி மாநில வன்னியர் சங்க கூட்டத்தையும் கூட்டினார். இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால், கட்சியே இரண்டாக பிளவு பட்டிருக்கிறதோ, என தொண்டர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்திட தான் முயன்று வருவதாகவும், விரைவில் இரு தரப்புக்கும் இடையே நிலவும் கசப்புகள் மறையும் என்றும் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். இப்படி, கட்சியில் நிலவும் பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும், தினமும் தன் உடலை பேணி காப்பதில் ராமதாஸ் முன்னுரிமை அளித்து வருகிறார். இதற்கிடையே ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள், நேற்று சமூக வலைதளத்தில் பரவ துவங்கி உள்ளன. இதுபற்றி கட்சி வட்டாரத்தில் கேட்டபோது, 'பா.ம.க., நிறுவனர், காலை 6:30 மணியிலிருந்து குறைந்தது ஒரு மணி நேரம் நீச்சல் குளத்தில் குளித்து உடற்பயிற்சி செய்வது வாடிக்கை' என்றனர். ராமதாஸ் தன் 87 வயதிலும், உடலை கட்டுப்கோப்புடன் பேணி காத்து வருவது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.