பா.ம.க., செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் நாட்டிலேயே முதல்முறை என ராமதாஸ் பெருமிதம்
அக்கா மட்டுமல்ல...
செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ காந்தி, அன்புமணிக்கு அக்கா மட்டுமல்ல, சம்பந்தியும்கூட. ஸ்ரீ காந்தியின் இளைய மகன் டாக்டர் பிரீத்திவன், அன்புமணியின் மூத்த மகளை மணந்துள்ளார். அந்த வகையில், ஸ்ரீ காந்தியும், அன்புமணியும் சம்பந்திகள். அன்புமணியின் எதிர்ப்பால், ஸ்ரீ காந்தியின் மூத்த மகன் முகுந்தன், பா.ம.க., இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, அரசியலில் களமிறங்கிய ஸ்ரீ காந்தி, இப்போது செயல் தலைவராகியுள்ளார். இதனால், இதுவரை அப்பா -- மகன் இடையே நடந்து வந்த அரசியல் அதிகார மோதல், அக்கா -- தம்பி மோதலாகவும் மாறி உள்ளது.
நமக்கு தோல்வி இல்லை
பாட்டாளி இளைஞர்கள், ராமதாசின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பயன் பெற்றவர்கள், அவரால் அடையாளம் காணப்பட்டு, அரசியலில் பதவி பெற்றவர்கள், நெஞ்சின் மீது ஏறி மிதித்து துரோகம் இழைத்தவர்களையும் தாங்கி வெற்றி பெறும் காலம் விரைவில் வரப் போகிறது. ஒற்றை தலைமையாக ராமதாஸ் இருக்கும் வரை, நமக்கு தோல்வி இல்லை. ராமதாஸ் என்ற நெஞ்சுரத்தோடு வீறு நடைபோடுவோம். - ஸ்ரீ காந்தி செயல் தலைவர், பா.ம.க., சென்னை: பா.ம.க., செயல் தலைவராக, தன் மூத்த மகள் ஸ்ரீ காந்தியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். தர்மபுரியில் நேற்று நடந்த பா.ம.க., மாவட்ட பொதுக்குழுவில், ராமதாஸ் பேசியதாவது: பெருமைக்குரிய தர்மபுரி மண்ணில், ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். செயல் தலைவர் என்ற பொறுப்பை கட்சியில் உருவாக்கி ஒருவருக்கு கொடுத்தேன். ஆனால், அதற்கு தான் தகுதியில்லை; அப்பதவி எனக்கு வேண்டாம் என அவர் கூறி விட்டார். வளர்ப்பார் எனவே, என் மகள் ஸ்ரீ காந்தியை, பா.ம.க., செயல் தலைவராக நியமிக்கிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார்; எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். பா.ம.க.,வின் நிர்வாகப் பொறுப்புகளில் யாரும் செய்யாததையெல்லாம் தொடர்ந்து செய்து வருகிறேன். அந்த வகையில் தான், ஒரு பெண்ணை கட்சியின் செயல் தலைவர் பதவியில் நியமித்திருக்கிறேன். எனக்கு தெரிந்து நாட்டிலேயே இது தான் முதல் முறையாக இருக்கும். இரு விஷயங்களைத்தான் சமீப காலமாக நான் எதிர்பார்த்தேன். ஒன்று, கட்சியை உள்ளன்போடு நேசித்து கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது, என்னை கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஸ்ரீ காந்தி சிறப்பாக செய்வார்; அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. பா.ம.க., இளைஞரணி தலைவராக நியமிக்கப் பட்டுள்ள தமிழ்க்குமரன், தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டுமல்ல; தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பார். அவர் வரலாற்றில் இடம்பெற போகிறார். பா.ம.க., தலைவராக நீண்ட காலம் செயல்பட்ட ஜி.கே.மணி, கட்சிக்கும், மக்களுக்கும் உழைத்தவர். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்போம். நாங்கள் செல்லும் கூட்டணி தான் வெற்றி பெறும். வெற்றி கிடைக்கும் கட்சி எங்களுடையதுதான் என்பதற்காக சரியான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறோம். வெற்றி, மிக விரைவில் நமக்கே வந்து சேரும். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்குழுவில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது: வன்னியர் சங்கத்தை துவங்கி, போராடும்போது, சோரம் போகாமல், எதிர்பார்ப்பு இல்லாமல், ராமதாஸ் சொன்னால், அதை அப்படியே கேட்பவர்கள் தான் தர்மபுரி மக்கள். அதனால் தான் எந்த தொகுதியிலும் இல்லாதவாறு, நான்கு முறை தர்மபுரியில் நம் கட்சியைச் சேர்ந்தோர் எம்.பி., ஆக்கப்பட்டனர். பிரதமர் மோடியும் கூட ராமதாசை புகழ்ந்து பேசியுள்ளார். தற்போது அவரை அவமானப்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் சிலர் அவதுாறு பரப்புகின்றனர். அதை ஏற்க முடியாது. இனியும் அதை சகித்துக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது அதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.