உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவாஜி வீட்டிற்கு உரிமை கோர மாட்டேன் மனு தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு

சிவாஜி வீட்டிற்கு உரிமை கோர மாட்டேன் மனு தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு

சென்னை: நடிகர் சிவாஜியின், 'அன்னை இல்லம்' வீட்டின் மீது, எந்த உரிமையும் கோர மாட்டேன் என்று உறுதியளிக்கும் வகையில், பிரமாண மனு தாக்கல் செய்யும்படி, அவரது மகன் ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர், 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனம், ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது. பட தயாரிப்புக்காக, தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து, துஷ்யந்த் வாங்கிய, 3 கோடியே 74 லட்சத்து, 75,000 ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து, 9 கோடியே, 2 லட்சத்து, 40,000 ரூபாய் செலுத்த வசதியாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், கடன் வழங்கிய நிறுவன இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி, கடந்தாண்டு மத்தியஸ்தர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவின்படி, பட உரிமை வழங்காததை அடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.சென்னை தி.நகரில் உள்ள நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும் என்று, அந்த நிறுவனம் கோரியது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீக்கக்கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் சார்பில், 'அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டின் மீது எந்த உரிமையும் கோர மாட்டேன் என்று உறுதியளிக்கும் வகையில், பிரமாண மனு தாக்கல் செய்யும்படி, ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !