ரேஷன் கடை பணியாளர்கள் நாளை முதல் ஸ்டிரைக்
ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 30 சதவீதம் போனஸ் வழங்குவது உட்பட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அக்., 16) முதல் அக்., 18 வரை கடையடைப்பு, தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடக்கிறது.ராமநாதபுரத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் தினகரன் ஆகியோர் கூறியதாவது: ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். எடை முறைகேடுகளை தவிர்க்க சரியான எடையில் தரமான உணவுப்பொருட்களை பொட்டலமாக கடைகளுக்கு வழங்க வேண்டும். கடைகளுக்கு 100 சதவீதம் உணவுப்பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.பொங்கல் தொகுப்பு வழங்கும் போது ஒரு ரேஷன்கார்டுக்கு ரூ.10 ஊக்கத்தொகை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உட்பட 32 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.இக்கோரிக்களை வலியுறுத்தி நாளை முதல் அக்., 18 வரை கடையடைப்பு செய்து மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது என்றனர்.