ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது; அமைச்சர் காந்திராஜ்
அரக்கோணம்: கூட்டுறவு ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட் தயார் நிலையில் உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நடந்த தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியில், 43 குழந்தைகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினர். பின், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அளித்த பேட்டி: கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில் வழங்கப்பட வேண்டிய அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களும் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும், கூட்டுறவு சங்க சூப்பர் மார்க்கெட்டுகளில் சிறப்பு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் எந்தெந்த பகுதிகளில் நடைமுறையில் உள்ளதோ, அந்தந்த பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதிலளிக்காமல், செய்தியாளர்களின் மைக்குகளை தள்ளிவிட்டு அமைச்சர் காந்திராஜ் புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.