ரேஷன் ஊழியர்கள் இன்று கடையடைப்பு போராட்டம்
சென்னை: தமிழகம் முழுதும் இன்று, கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக, ரேஷன் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது: ரேஷன் கடைகளுக்கு மூன்றாம் கட்டமாக, 700 டன் பெரிய வெங்காயம் அனுப்பப்பட்டது. ஒரு கடைக்கு சராசரியாக தலா, 50 கிலோ என, மூன்று மூட்டைகள் அனுப்பப்பட்டன. ஆனால், வெங்காயம் தரம் குறைவாக உள்ளது. வெங்காயத்தின் தரத்தை ஆய்வு செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டும், அதை அதிகாரிகள் செய்யவில்லை. சென்னை மதுரவாயலில் உள்ள ரேஷன் கடையில் வெங்காயம் வாங்கிய ஒருவர், தரமற்று இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த கடையில் பணிபுரிந்த பெண் ஊழியரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் ஊழியர் மீது தவறில்லை என, கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் முறையிட்டோம். அவர், சஸ்பெண்ட் செய்த ஊழியருக்கு உடனே வேலை வழங்குவதாக தெரிவித்தார்; ஆனால், வேலை வழங்கவில்லை. தரமற்ற வெங்காயம் விற்பதற்கு, கடை ஊழியர்கள் எந்த விதத்திலும் காரணம் இல்லை. அந்த வெங்காயத்தை அனுப்பிய அதிகாரிகள் தான் காரணம். எனவே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியருக்கு மீண்டும் வேலை வழங்க கோரி, இன்று மாநிலம் முழுதும் ரேஷன் கடைகளை திறக்காமல், மண்டல இணை பதிவாளர்கள் அலுவலகத்தில் ஒன்று கூடி, கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.