உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் முகப்புரை வாசித்து... புகழாரம்! 75வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் முகப்புரை வாசித்து... புகழாரம்! 75வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் எந்த இடத்தில் வைத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அதே இடத்தில் நம் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் முகப்புரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வாசித்தார். உடன், துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி, இரு சபைகளின் எம்.பி.,க்களும் எழுந்து நின்று, அதை பின்தொடர்ந்து வாசித்து புகழாரம் சூட்டினர்.கடந்த, 1949, நவ., 26ல் தற்போதைய பழைய பார்லிமெண்ட் உள்ளே அமைந்துள்ள மைய மண்டபத்தில் வைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்கர் அதை வழங்க, நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் ஏற்றுக் கொண்டார்.இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு நடந்து முடிந்து, 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதை கொண்டாடும் விழா, அதே மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. அம்பேத்கரும், ராஜேந்திர பிரசாத்தும் நின்றிருந்த அதே மேடையில் ஒன்பது இருக்கைகள் போடப்பட்டிருந்தன.நடுநாயகமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அமர்ந்திருந்தார். அவரது வலப்புறம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்யசபா சபை முன்னவர் நட்டா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.ஜனாதிபதியின் இடப்புறம் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுவன்ஷ் நாராயண்சிங் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.ஜனாதிபதி வந்தவுடன், தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. அனைவரையும் சபாநாயகர் ஓம்பிர்லா வரவேற்றுப் பேசினார். பின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அதன்பின், அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக, 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை ஜனாதிபதி வெளியிட்டார். விழா மலர்களாக இரண்டு புத்தகங்களை ஜனாதிபதி வெளியிட்டார். இது, அரசியலமைப்பு சட்டம் எவ்வாறு இயற்றப்பட்டது, அப்பணியில் பங்காற்றிய தலைவர்கள் மற்றும் அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து, 'மேக்கிங் ஆப் தி கான்ஸ்ட்யூஷன் ஆப் இந்தியா: ஏ கிளிம்ப்ஸ்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.அதோடு, அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்புகள், அது அமலுக்கு வந்தபின் இத்தனை ஆண்டுகளில் அது ஏற்படுத்திய மகத்தான சாதனைகளையும், முன்னேற்றங்களையும் உள்ளடக்கிய, 'மேக்கிங் ஆப் தி கான்ஸ்ட்யூஷன் ஆப் இந்தியா அண்டு இட்ஸ் குளோரியஸ் ஜர்னி' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.இது தவிர, சமஸ்கிருத மொழியிலும், பீஹாரைச் சேர்ந்த மைதிலி மொழியிலும் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகங்களை ஜனாதிபதி வெளியிட்டார்.பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, அவர்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக் கூடிய வகையில் நம் அரசியலமைப்பு சட்டம் உருவாக சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைதான் காரணம்.அரசியலமைப்பு நிர்ணய சபையில், 15 பெண்கள் பங்களிப்பு செய்தனர் என்பதை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன். இந்த சபையில் அளப்பறிய பங்காற்றிய சபை ஆலோசகரான பி.என்.ராவ், செயலர் அய்யங்கார், இணைச் செயலர் முகர்ஜி, துணைச் செயலர் ஜுகல் கிஷோர் கண்ணா ஆகியோரும் இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கவர்கள்.அரசியலமைப்பு நிர்ணய சபையில், நம் முன்னோர்கள் நிகழ்த்திய ஆரோக்கியமான விவாதங்கள் எல்லாமே, நம் நாடு குறித்தும், இங்குள்ள சமூக நிலை குறித்தும் ஆழமான புரிதலை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.நம் அரசியலமைப்பு சட்டம் என்பது, உயிருள்ள ஆவணம். அது நமக்கு வளர்ச்சிப்பாதையை காட்டும் ஆவணமும் கூட. சமூக, அரசியல், கல்வி, பொருளாதார விஷயங்களில் எல்லாம், இத்தனை ஆண்டுகளாக நம் நாடு சாதித்துள்ள விஷயங்கள் எல்லாமே நம் அரசியலமைப்பு சட்டத்தால் நடந்தவை.அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், நம் நாட்டை ஆட்சி செய்தது குறித்து, இதுவரையில் நாம் கற்றுக் கொண்ட அனுபவங்கள் அனைத்தையும், நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.இறுதியாக, அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தின் முதல்பக்க முகப்புரையில் உள்ள வாசகங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வாசிக்க, உடன் மேடையில் இருந்த துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மட்டுமின்றி, மைய மண்டபத்தில் இருந்த இரு சபைகளின் எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று அதை பின்தொடர்ந்து வாசித்து புகழாரம் சூட்டினர்.முறைப்பும், விறைப்பும் உள்ளூரில் தான்!விழா துவங்கும் முன், மைய மண்டபத்திற்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து முன்வரிசையில் அமர்ந்ததும், பா.ஜ., எம்.பி.,க்கள் பலரும் ஓடோடி வந்து வணக்கம் வைத்தனர். அப்போது, பல வரிசைகளுக்கு பின்னால் சக தி.மு.க., எம்.பி.,க்களுடன் அமர்ந்திருந்த பெரம்பலுார் எம்.பி., அருண் நேரு, விறுவிறுவென எழுந்து வந்து, அமித் ஷாவுக்கு, வணக்கம் வைத்தார். என்ன நினைத்தரோ, சில இருக்கைகள் தாண்டி அமர்ந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சென்று வணக்கம் போட்டார். இதை பார்த்த பலரும், 'டில்லியில் எதிர்காலம் உள்ள இளம் தி.மு.க., எம்.பி., இவர்தான்' என, கமென்ட் அடித்தனர்.அதேபோல விழா முடிந்து, இல்லம் திரும்ப, தங்களது கார்களுக்காக எம்.பி.,க்கள் காத்திருந்தனர். அதில் தி.மு.க., மூத்த எம்.பி., பாலுவும் ஒருவர். அவரைப் போலவே காத்துக் கொண்டிருந்தவர் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி. தம்பித்துரை. இவரது கார், சட்டென வந்துவிட்டது. பல நிமிடங்கள் காத்திருந்த பாலு, தன் கார் வர தாமதம் ஆவதை கண்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தம்பித்துரையிடம், ''ரொம்ப குளிருதுப்பா. தாங்க முடியல. போற வழிதான. என்னை, என் வீட்டுல விட்ரு,'' என கூறி, காரில் ஏறிப் பறந்தார். வழிகாட்டும் ஒளிவிளக்குபிரதமர் பெருமிதம்உச்ச நீதிமன்றத்தில் நடந்த அரசியலமைப்பு தினத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் நலன்களை தங்கள் சொந்த நலன்களுக்கு மேலாக கருதும் நேர்மையானவர்களை தவிர இந்தியாவுக்கு எதுவும் தேவையில்லை. தேசமே முதன்மையானது என்ற உணர்வு, பல நுாற்றாண்டுகளுக்கு அரசியலமைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.ஜம்மு - காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அங்கு முதல்முறையாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் தேவைகள், கனவுகள் காலப்போக்கில் புதிய உயரங்களை தொடும் என்பதை அரசியலமைப்பை இயற்றியவர்கள் அறிந்திருந்தனர். எனவே தான் நம் அரசியலமைப்பை வெறும் சட்டப் புத்தகமாக மட்டும் இயற்றவில்லை. மாறாக, உயிர்ப்புடன் உள்ள, தொடர்ந்து ஓடும் ஓடையாக அதை இயற்றினர்.நம் நாடு மிகப் பெரும் மாற்றத்திற்கான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அரசியலமைப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ