உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுமான பகுதியில் அறிவிப்பு பலகை ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

கட்டுமான பகுதியில் அறிவிப்பு பலகை ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

சென்னை:ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5,381 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவது கட்டாயம். ஆணையத்தில் பதிவு பெற்ற திட்டங்களில் மட்டுமே, வீடு, மனை விற்பனை அனுமதிக்கப்படும். இப்பதிவு இல்லாத திட்டங்களில், வீடு, மனை விற்பனை செய்தால், அதற்கான பத்திரப்பதிவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுமான திட்டங்கள் குறித்த விளம்பரங்களில், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு எண் உள்ளிட்ட விபரங்களை வெளியிடுவது கட்டாயம். இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு: குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த விபரம் மக்களுக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்டுமான திட்ட பகுதியிலேயே, இந்த பலகை அமைய வேண்டும். இந்த பலகை நான்கு அடிக்கு, இரண்டு அடி என்ற அளவில், பொது மக்கள் எளிதில் படிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதில், கட்டுமான நிறுவனத்தின் பெயர், திட்டத்தின் பெயர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த விபரம், பணி முடியும் கால வரம்பு, ரியல் எஸ்டேட் ஆணைய இணையதள முகவரி போன்ற விபரங்கள் இடம்பெற வேண்டும். கட்டுமான திட்ட பகுதியில், வேறு அறிவிப்பு மற்றும் விளம்பர பலகையில், ஒரு பகுதியாக இது அமையக்கூடாது. அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது குறித்த புகைப்பட ஆதாரங்களை, ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி