உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருவமழை நேரத்தில் பாசன ஏரிகள் புனரமைப்பு; அரசு நிதியை வீணடிக்கும் ஊரக வளர்ச்சி துறை

பருவமழை நேரத்தில் பாசன ஏரிகள் புனரமைப்பு; அரசு நிதியை வீணடிக்கும் ஊரக வளர்ச்சி துறை

சென்னை; பருவமழை துவங்கும் நேரத்தில், சிறுபாசன ஏரிகளை துார்வாரும் பணிக்கு, ஊரக வளர்ச்சி துறை 'டெண்டர்' வெளியிட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுதும் உள்ள பெரிய பாசன ஏரிகள், நீர்வளத்துறை வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. சிறுபாசன ஏரிகள், ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறைகள் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. முறையான பராமரிப்பின்மை காரணமாக, அவற்றில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து, புதர்மண்டி கிடக்கின்றன. பல ஏரிகள் கரைகள் பலமில்லாமல் உள்ளன. இதுபோன்று மாநிலம் முழுதும் உள்ள, 5,100 சிறுபாசன ஏரிகளை புனரமைக்க, ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கு, 350 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, கோடை காலத்தில் ஏரிகள் வறண்டு கிடந்தன. அப்போது, இந்த ஏரிகளை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி இருந்தால், ஜூன் மாதம் துவங்கிய தென் மேற்கு பருவ மழையிலும், அக்டோபரில் துவங்கவுள்ள வடகிழக்கு பருவ மழையிலும் கிடைக்கும் நீரை சேமித்து இருக்க முடியும். ஆனால், ஊரக வளர்ச்சி துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கவுள்ள நிலையில், திருவள்ளூர், திருச்சி, சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கடலுார், விருதுநகர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்ட ஏரிகளை துார்வாருவதற்கான, டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு ஏரிக்கும் மாநில அரசு நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானிய நிதியில், ஐந்து முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட உள்ளது. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் இப்பணிகளை மேற்கொள்ள, நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இப்போதுதான் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சி துறை தயாராகி வருகிறது. இதனால், அரசு நிதி அதிகளவில் வீணடிக்கப்படும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், 'பருவமழை துவங்கும் நேரத்தில், ஏரியை துார்வாரி மண்ணை கரைகளில் கொட்டினால், மழையில் கரைந்து விடும். இதனால், அரசு நிதி வீணடிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 05, 2025 07:42

கொள்ளை அடிப்பதில் வல்லமையான திருட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் தூர் வார ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்வது சாதகமானதாக.


சமீபத்திய செய்தி