தொழில்நுட்ப சிக்கல்களாம் போராட பதிவுத்துறை ஊழியர்கள் முடிவு
சென்னை:பதிவுத் துறை ஊழியர்கள் மீதான பொய் குற்றச்சாட்டுகளை நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சார் - பதிவாளர் சங்கம் சார்பில், 15 நாட்கள் கருப்பு பட்டை அணிந்து போராட, ஊழியர்கள் முடிவு செய்து உள்ளனர். இது குறித்து, அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்துார் பாண்டியன் கூறியதாவது: பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பதிவுத் துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட, ஊழியர்கள் சார்ந்த நிர்வாகப் பிரச்னைகளை வலியுறுத்தி, 15 நாட்கள் கருப்பு பட்டை அணிந்து, அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளோம். பதிவுத் துறை வாயிலாக, ஆண்டுக்கு 40 முதல் 50 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், தொழில்நுட்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சில மனுக்கள் நிலுவையில் வைக்கப் படுகின்றன. இவற்றின் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதிவுச் செய்தால், தொடர்புடைய ஊழியர்களை பணியிடை நீக்கம், பணி நீக்கம் செய்கின்றனர். இதுவரை, 275 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், பதிவுத் துறை நிர்வாகத்தில் ஊழியர்கள் தொடர்பான பிரச்னைகளை, உயர் அதிகாரிகள், பதிவுத் துறை ஐ.ஜி.,க்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், பணியிட மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகளில், நாங்கள் சிக்கி அவதிப்படுகிறோம். எனவே, இப்பிரச்னையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.