தவறான சிகிச்சை அளித்த டாக்டர் பெயர் மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கம்
சென்னை; புற்றுநோய் பாதிப்பை குறித்த நேரத்தில் தெரியப்படுத்தாமல், இரண்டு அறுவை சிகிச்சை செய்து, பெண் உயிரிழக்க காரணமான டாக்டரின் பெயரை, மாநில மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுஉள்ளது. மீண்டும் பரிசோதனை
உயர் நீதிமன்றத்தில், சென்னை மண்ணடியை சேர்ந்த அப்துல் ஹக்கீம், கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனு: வயிற்று வலி காரணமாக, என் தாய் சித்தி கதீஜா, 65, சென்னை அண்ணா நகரில் உள்ள செல்வரங்கம் மருத்துவமனையில், 2023 டிசம்பர், 23ல் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், 'அப்பெண்டிசைடிஸ்' எனக்கூறி, இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தனர். மீண்டும் பரிசோதனை செய்ததில், அவருக்கு நாள்பட்ட புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. உடல் நிலை மிகவும் மோசமாகி, கடந்த ஆகஸ்ட், 25ல் இறந்தார்.என் தாயின், 'பயாப்ஸி' பரிசோதனை அறிக்கையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது. அதை எங்களிடம் தெரியப்படுத்தவில்லை. புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் மற்றும் இரண்டு தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் செல்வகுமார், பர்ஹான் ஆகியோரின் உரிமங்களையும், அவர்களின் பெயர்களையும், இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து நீக்கக்கோரி, 2024 ஜூலை 9ல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில், என் தாய் புகார் அளித்தார். அதை பரிசீலித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. விதிமீறல்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'சம்பந்தப்பட்ட செல்வரங்கம் மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் தரப்புக்கு உரிய வாய்ப்பு வழங்கி, சட்டப்படி மனுதாரரின் தாயார் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவை, 12 வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், கடந்த மாதம், 23ம் தேதி பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டு ஜனவரியில் பெற்ற பரிசோதனை அறிக்கையில், இறந்த கதீஜாவுக்கு நான்காவது நிலை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதுகுறித்த விபரங்களை, நோயாளி மற்றும் உறவினர்களுக்கு தாமத மாக தெரியப்படுத்தி உள்ளனர். டாக்டர் செல்வகுமார், நவீன மருத்துவம் செய்தது, மருத்துவ விதிமுறைகளுக்கு எதிரானது. யுனானி மருத்துவம் படித்த டாக்டர் பர்ஹானை, தன்னுடன் பணிபுரிய அனுமதித்தும் செல்வகுமார் விதிகளை மீறியுள்ளார்.எனவே, தொழில்முறை அலட்சியம் மற்றும் ஒழுங்குமுறை மீறல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், டாக்டர் செல்வகுமார் பெயர் மாநில மருத்துவ பதிவேட்டில் இருந்து ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.