உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்பு பணி

பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்பு பணி

துாத்துக்குடி,:எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த நிலையில், உடனடியாக மறுசீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன. துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் பிறந்த வீடு 1973ல் அரசுடமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், கையெழுத்து பிரதிகள், அவர் எழுதிய கடிதங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு, கிளை நுாலகமும் செயல்பட்டு வருகிறது.இரண்டு அடுக்குகளை கொண்ட காரை கட்டடம் மிகவும் பழமையானது என்பதால், மழைநீர் கசிவு ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென இல்லத்தின் முன் பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது.உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அப்பகுதியில் யாரும் செல்லாத வகையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடேயே, பழமை மாறாமல் பாரதியார் இல்லத்தை மறுசீரமைப்பு செய்யும் பணி நேற்று துவங்கியது. கலெக்டர் இளம்பகவத் கூறியதாவது:பாரதியார் வீடு இடிந்து விழுந்த பகுதிகளை பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நேரில் ஆய்வு செய்தனர். பாரதியார் பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் சட்டசபையில் அறிவித்து இருந்தார்.பொதுப்பணி துறையின் பாரம்பரிய கட்டடங்கள் பிரிவு இன்ஜினியர்களால் பாரதியார் பிறந்த இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு மறு சீரமைக்கப்படுகிறது. அதுவரை சுற்றுலா பயணியர் யாரும் பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்தது தொடர்பாக, எழுத்தாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:கடந்த 2009ல் பாரதி இல்லத்தின் முதல் மாடி சற்று பலகீனமாக உள்ளது; செப்பனிட வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கூறினேன். அவர் உடனே அதை பராமரிக்குமாறு துாத்துக்குடி கலெக்டருக்கு கடிதம் எழுதினார். தற்போது வரை அந்தப் பணி சரியாக நடக்கவில்லை. அதிகாரிகள் கவனிக்க தவறிவிட்டனர். அமைச்சர்கள், எம்.பி.,க் கள் எல்லாம் இருந்தும் கூட பாரதி பிறந்த வீட்டின் சீர்குலைவு பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, மகாகவி பாரதியார் இல்லத்தை சீரமைக்காத தமிழக அரசை கண்டித்து எட்டையபுரம் பாரதியார் இல்லத்தின் அருகே, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக 27 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
மார் 27, 2025 08:58

போராட்டம் நடத்தியதாக 27 பேரை போலீசார் கைது செய்தனர் இதைத்தவிர திராவிட மாடல் அரசுக்கு வேறொன்றுமே தெரியாது எதிர் கட்சிகளை ஒடுக்குவது கைது செய்வது பெண்களை மாலி 6-மணிக்குமேல் சிறையில் வைப்ப. கலைஞர் இருக்கும்போதே இந்த வீட்டிற்கு மறுசீரமைப்பு நடத்த அதிகாரம் கொடுத்தான் இன்னும் அது நடக்கவில்லை அதற்கு யார்காரணம் அது நடந்திருந்தால் இப்போது மேற்கூரை இருந்து விழுந்திருக்காது யார் காரணம் ஆட்சியாளர்க்கே அதற்கு முழு பொறுப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை