UPDATED : பிப் 14, 2024 01:46 PM | ADDED : பிப் 14, 2024 12:17 PM
கோவை: தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் கூறினார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தற்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லையென்றாலும், அது கண்டிப்பாக நடக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள், பார்லி., உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. இன்றைக்கு ஒரு எம்.பி., 20 லட்சம் பேரை பார்க்க முடியாது, சேவை செய்ய முடியாது.ஒரு எம்எல்ஏ.,வுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட தொகுதியாக ஒதுக்கப்படுகிறது. அவர்களாலும் பணி செய்ய முடியவில்லை. இதனால் அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்லி.,யில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 2026ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றே ஆக வேண்டும்; அதை தவிர்க்க முடியாது. சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்களை யோசனை இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
போட்டியில்லை
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ''லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். எல்லா இடத்திற்கும் சென்று பிரசாரம் செய்யுங்கள், கட்சியை தயார் செய்யுங்கள் என்ற பணியை கட்சி மேலிடம் எனக்கு கொடுத்துள்ளது. எனக்கு வேலை சரியாக உள்ளது; தேர்தலில் போட்டியிட நேரமில்லை. கோவையில் எத்தனையோ தலைவர்கள் சேவை செய்ய தயாராக உள்ளனர். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம். அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். பின்னால் இருந்து வேலை செய்ய, சேவகனாக தயாராக இருக்கிறேன். அதன்பிறகு கட்சியின் முடிவுதான்'' என்றார்.