ஆட்டோ செயலி துவக்க கோரி போராட்டம்: சி.ஐ.டி.யு., அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில், கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எரிபொருள் விலை உயர்வு, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கங்கள் தனித்தனியே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சி.ஐ.டி.யு., தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். தனி செயலியை அறிவிக்க வேண்டும். பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25, 26ம் தேதிகளில், கிண்டி போக்குவரத்து ஆணையரக அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், இணை ஆணையர் அலுவலகங்கள் முன், வரும் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.