| ADDED : மார் 14, 2024 12:37 AM
சென்னை:திருத்தி அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம், மார்ச் 6ல் அமலுக்கு வந்துள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாக அதிகரித்து வருகின்றன. இதில் வீடு வாங்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத் தேவையை கருத்தில் கொண்டு, 1994ல் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை யாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டது; விதிமுறைகள், 1995ல் வெளியிடப்பட்டன. இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு ஆவணம் 2022 ஏப்ரலில் வெளியிடப்பட்டு, கடந்த 6ம் தேதி அமலுக்கு வந்தது.இதற்கான அரசிதழ் அறிவிப்பை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுஉள்ளார்.
பயன் என்ன?
திருத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்: அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனையின் போது, 'கார்பெட் ஏரியா' எனப்படும் சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவு, தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் உரிமையாளர்களுக்கான பங்கு அடிப்படையில், பொது மற்றும் அடிப்படை வசதிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, அதற்கு மொத்த உரிமையாளர்களில், மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தால் போதும் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும், வீடு வாங்கும் அனைவருக்கும், உரிய முறையில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம்.