கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் ரகளை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதனால், அருகில் இருக்கும் பகுதிகளில் துாசு படர்ந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து அறிய 'அறப்போர் இயக்கம்' என்ற அமைப்பு சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ராதாபுரம் பகுதியில், அதிக எண்ணிக்கையில் செயல்படும் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது கூட்ட அரங்கிற்குள், கல் குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் 25 பேர் வந்து அமர்ந்தனர். அதில் வினோத்குமார் என்பவர், ''அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ஏற்கனவே தான் அளித்த பேட்டிகளில், கல்குவாரி நடத்துபவர்களை திருடர்கள் என விமர்சித்துள்ளார். அவர் மன்னிப்பு கோர வேண்டும்,'' என்றார். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் சுரேஷ்,''அது குறித்து இங்கு பேசக்கூடாது; தேவையானால், சட்டப்பூர்வ நவடிக்கை எடுங்கள்,'' என்றார். இதை ஏற்காமல் வினோத்குமாருடன் வந்தோர் சிலர், பிளாஸ்டிக் சேர்களை எடுத்து, சுரேஷை நோக்கி வீசினர். இதில் சுரேஷுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், ''ஏற்கனவே நான்கு உயிர்களை பறித்த அடைமிதிப்பான்குளம் கல்குவாரி அருகில் புதிய கல்குவாரி அமைய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்பாட்டிலேயே கருத்துக்கேட்பு கூட்டத்தில் ரகளை நடத்தப்பட்டுள்ளது. ''பின்னணியில் தி.மு.க., வினர் உள்ளனர்,'' என்றார். - அன்புமணி தலைவர், பா.ம.க., வழக்கறிஞர் சுரேஷ் மீது திட்டமிட்ட தாக்குதல் தென் மாவட்டங்களில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, தாதுமணல் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடந்தது. அது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மூத்த வழக்கறிஞர் சுரேஷை நியமித்தது. அதன்படி, ஆய்வு செய்து சுரேஷ் அளித்த அறிக்கை அடிப்படை யில், தாதுமணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நெல்லை கனிமவளக் கொள்ளை குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில், சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.