உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிளகாய் பொடி என்ற  அடைமொழியை நீக்க ரவுடி வெங்கடேஷ் வழக்கு

மிளகாய் பொடி என்ற  அடைமொழியை நீக்க ரவுடி வெங்கடேஷ் வழக்கு

சென்னை:தன் பெயருடன் உள்ள, 'மிளகாய் பொடி' என்ற அடைமொழியை, ஆவணங்களில் இருந்து நீக்கும்படி உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரவுடி வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை பாடியநல்லுாரை சேர்ந்த ரவுடி கே.வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு: என் தாய், 15 ஆண்டுகளாக மிளகாய் பொடி வியாபாரம் செய்து வந்தார். அரசியல் போட்டியில், பல்வேறு வழக்குகளில், போலீசார் என்னை சேர்த்துள்ளனர். பெற்றோர் வைத்த வெங்கடேஷ் பெயருடன், மிளகாய் பொடி என்ற அடைமொழி சேர்த்து, சிறை அதிகாரிகள் அழைக்கின்றனர். இவ்வாறு அழைப்பதால், மன ரீதியாக நானும், என் குடும்பத்தினரும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளோம். 'மிளகாய் பொடியை துாவி கொலை செய்வீர்களா' என, என்னிடம் கேட்கின்றனர். இதனால், சமூகத்தில் எனக்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே, ஆவணங்களில் இருந்து மிளகாய் பொடி என்ற அடைமொழியை நீக்க கோரி, புழல் சிறை நிர்வாகம், டி.ஜி.பி., உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. என் பெயருடன் மிளகாய் பொடி என்ற அடைமொழியை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, 'இந்த மனுவை தனி நீதிபதி தான் விசாரிக்க முடியும்' என கூறி, தனி நீதிபதிக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !