ரூ.1.70 கோடி ஜி.எஸ்.டி., விவசாயிக்கு கடும் அதிர்ச்சி
பெரம்பலுார்: பெரம்பலுாரில், 75 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் விவசாயிக்கு, 1.70 கோடி ஜி.எஸ்.டி., அபராதம் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி, 50, பெரம்பலுார் கலெக்டர் அப்துல் ராசிக்கிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: இயற்கை விவசாயம் செய்து வரும் எனக்கு ஆண்டு வருமானம் 75 ஆயிரம் ரூபாய். என் பெயர், ஆதார் எண், வங்கி ஆவணங்களை பயன்படுத்தி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீரெங்கபாளையம் முகவரியில், டி.வி.எல்., கிரிஷ் டிரேடர்ஸ் என்ற பெயரில் பழைய இரும்பு, மரக்கட்டைகள் விற்பனை செய்யும் நிறுவனம், ஜி.எஸ்.டி., எண் பெற்றுள்ளது. அந்த எண்ணை வைத்து, ஆகஸ்டில், 4.71 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்ததாகவும், போலி பில்கள் மூலம் உள்ளீட்டு வரி வரவு மோசடி செய்ததாகவும் வணிக வரித்துறை, என் மீது குற்றம் சாட்டியுள்ளது. அதற்காக, 1.70 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., அபராத தொகை செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனக்கும், அந்த நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. என் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி, மோசடி செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இம்மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.