உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகை பறித்தவர்களை 7 ஆண்டாக கண்டுபிடிக்காத போலீஸ் மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

நகை பறித்தவர்களை 7 ஆண்டாக கண்டுபிடிக்காத போலீஸ் மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:நகை வழிப்பறி செய்தவர்களை, ஏழு ஆண்டாக போலீசாரால் கண்டு பிடிக்க முடியாததால், 17.5 சவரன் தங்கத்தை பறிகொடுத்த மூதாட்டிக்கு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூரைச் சேர்ந்த, கிருஷ்ணவேணி, 68, என்பவர் தாக்கல் செய்த மனு:

5,000 பணம்

நானும், என் கணவர் பழனியும், 2018ல், திருவள்ளூரில் மா.பொ.சி., தெருவில் நடந்து சென்றோம். செயின் உட்பட 17.5 சவரன் நகைகள், 5,000 பணம் போன்றவற்றையும் பையில் எடுத்துச் சென்றோம். இதை கவனித்த சிலர் பையை பறித்துச் சென்றனர். இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தோம். வழக்குப்பதிவு செய்த போலீசார், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'குற்றவாளிகளை இதுவரை பிடிக்க முடியவில்லை என, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'வழக்கில் துப்பு கிடைத்தால், மீண்டும் விசாரிக்க தயாராக உள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நகை, பணம் பறிபோய் ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் பொதுவான உத்தரவை பிறப்பிக்க விரும்பவில்லை. இதுபோல சமீபகாலமாக, மூத்த குடிமக்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. உதவியற்ற ஆன்மாக்களை ஏமாற்றுவதால், அவர்கள் கடும் வேதனை அனுபவிக்கின்றனர்.

மனதளவில் பாதிப்பு

இந்த வழக்கில் நகை, பணத்தை பறிகொடுத்தவர்கள் மூத்த குடிமக்கள். அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பர். புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் முக்கிய நோக்கமே, மூத்த குடிமக்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படி, குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடிக்க தவறினால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். 2013ம் ஆண்டில், தமிழக அரசால் இயற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு சட்டம் வெறும், 1 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவிக்கிறது. திரும்ப தர வேண்டும் அந்த தொகையை உயர்த்த வேண்டும். தற்போது சவரன் நகை, 75,000 ரூபாய் என கணக்கிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் இழந்ததில் குறைந்தபட்சம், 30 சதவீதம், அதாவது, 4 லட்சம் ரூபாய் வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பெற்றுத் தருவதை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுதி செய்ய வேண்டும். ஒரு வேளை, காவல் துறையினர் திருட்டை கண்டுபிடித்துவிட்டால், அந்த பணத்தை அரசிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை