சைபர் குற்றவாளிகளின் கைக்கு போகாமல் தப்பியது ரூ.526 கோடி: ஏ.டி.ஜி.பி., தகவல்
சென்னை:தமிழகத்தில், சைபர் குற்றங்கள் தொடர்பாக, ஒன்பது மாதத்தில், 91,161 புகார்கள் பெறப்பட்டு, 526 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாக, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சமீபத்தில், சைபர் குற்றவாளிகள், 'டிஜிட்டல்' கைது, கிரிப்டோகரன்சி மோசடி, இணையதளங்களை முடக்குவது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். உங்களிடம் சைபர் குற்றங்களுக்கு முயற்சி செய்யப்பட்டு இருந்தால் கூட, www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் உடனடியாக புகார் பதிவு செய்யுங்கள்; காலதாமதம் வேண்டாம். சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பணத்தை மீட்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய சைபர் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் விரைந்து செயல்பட்டு வருகிறது. 1930, 112, 108 என்ற கட்டணமில்லா எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.சமீபத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் போல பேசிய சைபர் குற்றவாளிகள், 'நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்' என, மிரட்டல் விடுத்து, 1.71 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர். அதுபற்றி புகார் பதிவு செய்யப்பட்ட உடனே துரிதமாக செயல்பட்டு, 1 ரூபாய் கூட, சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் மீட்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடப்பு ஆண்டு செப்டம்பர் வரை, சைபர் குற்றங்கள் தொடர்பாக, 91,161 புகார்கள் பதிவாகி உள்ளன; 1,116 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. அதில், 526 கோடி ரூபாய் பணம், குற்றவாளிகள் கணக்கிற்கு போகாமல் முடக்கப்பட்டுள்ளது. 48 கோடி ரூபாய் திரும்ப பெற்று, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தந்துள்ளோம். இணைய உலகில் யாரையும் நம்ப வேண்டாம்; எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யார் பரிந்துரை செய்தாலும், அறிமுகம் இல்லாத நபர்கள் நடத்தும், 'டெலிகிராம், வாட்ஸாப்' குழுக்களில் இணைய வேண்டாம்.'ஆன்லைன்' வாயிலாக யாரையும் கைது செய்ய முடியாது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக மர்ம நபர்கள் கூறினால், தயவு செய்து பீதியடைய வேண்டாம். அவர்களுக்கு பணமும் செலுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.