உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.92 லட்சம் மோசடி: 3 பேர் கைது

ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.92 லட்சம் மோசடி: 3 பேர் கைது

சென்னை:இணையவழி வர்த்தகம் வாயிலாக, அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, 92 லட்சம் ரூபாய் மோசடி செய்த, 'சைபர்' குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.பொது மக்களின் மொபைல் போன் எண்களை, 'ஆன்லைன்' வர்த்தகம் தொடர்பான, 'வாட்ஸாப்' குழுவில், சைபர் குற்றவாளிகள் இணைப்பது வழக்கம். கடந்த ஜூலை, 19ல், மதுரையை சேர்ந்த நபரின் மொபைல் போன் எண்ணை, இதுபோன்ற மோசடி, 'வாட்ஸாப்' குழுவில் இணைத்துள்ளனர்.

முதலீடு

அதில், ஏற்கனவே உள்ள சைபர் குற்றவாளிகளின் கூட்டாளிகள், ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்தது போல தகவல்களை பரப்பி உள்ளனர். அதை உண்மை என நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய, மதுரை நபர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை வாட்ஸாப் அழைப்பு வாயிலாக தொடர்பு கொண்ட சைபர் குற்றவாளிகள், 'நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட, புதிதாக வங்கி கணக்கு துவக்க வேண்டும்' எனக்கூறி, 'பான், ஆதார் கார்டு' உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளனர்.பின், 'புதிதாக வங்கி கணக்கு துவங்கி விட்டோம். அதற்கு பணம் அனுப்புங்கள்' என்று சொல்லி, 92 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். அந்த பணத்தை, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ததால், கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக பொய் சொல்லி, அதை எடுக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என, 8,000 ரூபாய் பெற்றும் மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்து, அந்த நபர், www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார், சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், மதுரை மாவட்ட சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரணைக்கு உத்தரவிட்டார். தனிப்படை போலீசார், மோசடி பணத்தை சுருட்ட, வெளி மாநில சைபர் குற்றவாளிகள், பந்தன் வங்கியில் கணக்குகள் துவங்கியுள்ளதை கண்டறிந்தனர். அவர்களுக்கு உடந்தையாக, நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ்குமார், சந்திரசேகரன், கோவை சவுரியார்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் இருந்தது தெரியவந்தது.

கமிஷன்

மூவரும் சேர்ந்து, நித்தீஷ்குமார் பெயரில் பந்தன் வங்கியில் கணக்கு துவங்கி, வெளி மாநில சைபர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு, 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, அதற்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றுள்ளனர்.இதையடுத்து, மூவரையும் கைது செய்து, வங்கி ஏ.டி.எம்., கார்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. வங்கி கணக்கில் இருந்த, 21.08 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளனர்.வெளி மாநில சைபர் குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஆந்திரா, பீஹார், குஜராத், ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, நாகலாந்து, ஒடிசா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்களிடம், 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக, நித்தீஷ்குமார், 24; சுரேஷ், 42; சந்திரசேகரன், 49 ஆகியோர், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ