5.18 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.498 கோடி நிவாரணம்
சென்னை:புயலால் பாதிக்கப்பட்ட, 5.18 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 498 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவ மழையின் போது, 'பெஞ்சல்' புயல் வீசியது. பெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடர் என, தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் பேரிடராக அறிவித்தது. புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுத்து, மானாவரி பயிர்களுக்கு ெஹக்டேருக்கு, 8,500 ரூபாயும், நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு, ெஹக்டேருக்கு, 17,000 ரூபாயும், நீண்ட கால பயிர்களுக்கு 22,500 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். அதன்படி புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணககெடுக்கப்பட்டது. விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், செங்கல்பட்டு, தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட, 18 மாவட்டங்களில், 7.97 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.பாதிக்கப்பட்ட 5.18 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 498 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரண தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில், ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.