கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் பெற ஊரக வளர்ச்சித்துறை புதிய சட்டம்
சென்னை : கிராம ஊராட்சிகளில், வணிக உரிமம் பெற, ஊரக வளர்ச்சித் துறை, புதிய சட்டத்தை நடை முறைப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், பல்வேறு தொழில்கள் நடத்த, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாயிலாக உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், கிராமப்புற ஊராட்சிகளில், வரைமுறையின்றி தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊரகப்பகுதிகளில் நடக்கும் தொழில்களை வரன்முறைப்படுத்த, தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில், வர்த்தகம் அல்லது வணிக உரிமம் வழங்கும் சட்டம், நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழக பஞ்சாயத்து சட்டம் 1994ன் கீழ், அனைத்து ஊராட்சிகளுக்கும், இது பொருந்தும். அதன்படி, கிராம ஊராட்சி எல்லைக்குள் பொது அல்லது தனியார், எந்த இடத்திலும், ஊராட்சி அனுமதி இல்லாமல், எந்த ஒரு வர்த்தகத்தையும், இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான கட்டணங்கள், ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தனியார் வாகன நிறுத்தம், கழிவறைகள், மசாஜ் பார்லர் மற்றும் ஸ்பா, இறைச்சி கூடம் நடத்த, அனுமதி பெறுவதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, தொழில் துவங்க ஒரு முறை மட்டும் அனுமதி பெற்றால் போதும். 'ஸ்பா' துவக்கவும், இயக்கவும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.