சங்க இலக்கிய தொகுப்பு நுால் வெளியீடு
சென்னை: சென்னை, பெசன்ட் நகரில் செயல்பட்டு வரும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலையம் சார்பில், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருது, டாக்டர் உ.வே.சா., தமிழறிஞர் விருது, சங்க இலக்கியத் தொகுப்பு நுால்கள் வெளியீடு என, முப்பெரும் விழா, சென்னை வி.ஐ.டி., பல்கலையில் நேற்று நடந்தது.விழாவிற்கு, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார்.சங்க இலக்கியத் தொகுப்பு நுாலை, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் பிரதியை, 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார்.மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருது, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வர் சிவசந்திரனுக்கும், டாக்டர் உ.வே.சா., விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை தமிழ் இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டது.விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்று, பலர் கேட்கின்றனர். இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கும் அகழ்வுஆராய்ச்சிகளில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஆதாரம் கிடைத்து வருகிறது.புறநானுாற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர், மதுரை பக்கத்தில் இருக்கும், மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ளது. இவ்வாறு, சங்ககால பெயர்கள் நம்முடைய கல்வெட்டுகளில் இருக்கின்றன. நம்முடைய சங்க இலக்கியங்களை, நாம் மறந்துவிடக் கூடாது.தமிழ்மொழியின் வடிவம், காலம் காலமாக மாறி வந்துள்ளது. தமிழ்ச்சங்கம், தமிழாக இருந்துள்ளது. பக்தி தமிழாக, உரைநடைத் தமிழாக, இசைத்தமிழாக வந்திருக்கிறது. இன்றைக்கு ஆங்கில சொற்கள்கூட, பல கலப்பு இனங்களாக வந்துள்ளன.ஆனாலும், தன் அடையாளத்தை இழக்காமல், தமிழ் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இன்று மட்டுமல்ல; எத்தனை யுகம் வந்தாலும், தமிழ் தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில், சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் மோகன், டாக்டர் உ.வே.சா., நுால் நிலைய செயலர் முனைவர் சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைத்தலைவர் முனைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.