துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
சென்னை: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள், சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. செல்வராஜ் தலைமை வகித்தார். கொரோனா வார்டுகளில் பணியாற்றிய, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்களில், கொரோனா ஊக்கத்தொகை, 15,000 ரூபாய் பெறாமல் உள்ள 459 பேருக்கு, அதை வழங்க வேண்டும். பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.